சிங்கம் எப்போதும் சிங்கம் தான்.. ஒரே நாளில் தி கோட் திரைப்படம் செய்த இரண்டு சாதனை.. என்ன தெரியுமா?
Dec 13, 2024, 12:34 PM IST
சிங்கம் எப்போதும் சிங்கம் தான்.. ஒரே நாளில் தி கோட் திரைப்படம் செய்த இரண்டு சாதனை.. என்ன தெரியுமா?
தி கோட் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதியான இன்றுடன் வெளியாகி 100 நாட்களைத் தொட்டுள்ளது. மேலும் மற்றொரு சாதனையாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலிலும் தி கோட் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரித்தனர்.
தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:
‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்திருந்தார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர்.
இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
தி கோட் படத்தின் கதை:
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti Terrorist Squad Team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்னை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்னை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
தி கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:
தி கோட் திரைப்படம் ரிலீஸான முதல் நாள் இந்தியாவில் ரூ.44 கோடி வசூல் செய்தது. அதன்படி, தமிழில் ரூ.39.15 கோடியும், இந்தியில் ரூ.1.85 கோடியும், தெலுங்கில் ரூ.3 கோடியும் என மொத்தமாக 44 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த இந்த படம் ரூ. 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனை தி கோட் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்தார்.
100 நாட்களைக் கடந்த தி கோட்:
இந்நிலையில் தி கோட் திரைப்படம் டிசம்பர் 13ஆம் தேதியான இன்றுடன் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம், ஒரு நிகழ்வு. எல்லையற்ற வாழ்த்துகள். நடிகர் விஜய் எல்லையற்ற தி கோட் மரபை வரையறுக்கிறார்’’ என வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து கூகுள் இந்தியா வெளியிட்டுள்ள குறிப்பில், ‘’ 2024ல் அதிகம் தேடப்பட்ட படங்களில் தி கோட் திரைப்படம் இருந்துள்ளது. சிங்கம் என்றுமே சிங்கம் தான்’’ எனத் தகவல் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்