சிறப்பு காட்சி கிடையாது..அதிகாலை முதல் ஷோ எப்போது? கங்குவா பார்க்க அண்டை மாநிலம் படையெடுக்கும் ரசிகர்கள்
Nov 13, 2024, 02:35 PM IST
கங்குவா படத்துக்கு தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்பு காட்சி கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிஸையில் முதல் ஷோ பார்க்கஅண்டை மாநிலம் படையெடுக்கிறார்கள் ரசிகர்கள். அத்துடன் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கப்படாததற்கு ரசிகர்கள் பலர் தங்களது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கங்குவா படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்துக்கு சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் அதிகாலை காட்சிக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், படத்தை அதிகாலையிலேயே பார்த்து ரசிக்க ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
கங்குவா படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பேண்டஸி ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் 8 மொழிகளில் நாளை ரிலீஸசாகிறது. இதையடுத்து படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி காட்சிக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், படம் 5 காட்சிகள் திரையிடப்படவுள்ளது.
முன்னதாக, அதிகாலை 5 மணி காட்சிக்கு கங்குவா தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, "#கங்குவா உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிகளுடன் வெளிவரத் தயாராக உள்ளது. தமிழக அரசுக்கு நன்றி" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக காலை 11 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்படும் நிலையில், கங்குவா படத்துக்கு காலை 9 மணி முதல் காட்சி தொடங்கவும், இரவு 2 மணி வரை கடைசி காட்சியை முடித்து கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்படுகளை செய்திடவும் அறிவிறுத்தியுள்ளது.
அதிகாலை காட்சிக்கு அண்டை மாநிலம் படையெடுக்கும் ரசிகர்கள்
இதற்கிடையே கங்குவா படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அண்டை மாநிலங்களான கேரள, ஆந்திரா, கர்நாடகாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை முன்னரே பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலத்துக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
ரசிகர்கள் ஏமாற்றம்
கங்குவா படத்துக்கு பக்கத்து மாநிலங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அனுமதி அளிக்காததற்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இப்போல்லாம் காலை 9 மணி காட்சியே சிறப்பு காட்சி ஆகிவிட்டது என ரசிகர்கள் ஒருவர் கருத்தை பகிர்ந்துள்ளார்.
"குறைந்தது காலை 7 மணி காட்சியாவது திரையிடலாம்". "அதிகாலை காட்சிக்கு பதில் காலை 7 மணி காட்சிக்கு கோரிக்கை வைக்கலாம்" என ரசிகர்கள் சில தங்களது ஆதங்கத்துடன், ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளனர்.
ஏன் அதிகாலை காட்சி தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்டது?
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் நாளில் மிட்நைட் ஷோ, அதிகாலை காட்சிகள் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டு வந்தன. இந்த காட்சியை காண குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்றில்லாமல், பொதுமக்களும் திரையரங்குக்கு சென்று கொண்டாட்டத்துடன் பார்த்து வந்தனர்.
கடந்த ஆண்டு பொங்கல் வெளியீட்டின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகாலை காட்சிகளை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த முடிவு விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், அந்த சம்பவத்துக்கு பிறகு எந்த பெரிய நடிகராக இருந்தாலும், எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் காலை முதல் காட்சியானது 9 மணி என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களில் தமிழ் திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே வெளியிடப்படுவதால், ரசிகர்கள் பலரும் முண்டியடித்துக்கொண்டு அங்கு சென்று படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார். இதனால் முதல் நாள் வசூலில் பாதிப்பை சந்தித்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், அரசு தனது முடிவில் தற்போது வரை உறுதியாக உள்ளது.
கங்குவா ரிலீஸ் ட்ரெயலர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது கங்குவா, தமிழில் உருவாகியிருக்கும் பாகுபலி என்று சூர்யா பேசியிருந்தார். அத்துடன் ட்ரெய்லர் காட்சிகளும் பிரமாண்டமாக இருந்த நிலையில்,சூர்யா இரண்டு விதமான லுக்கில் தோன்றியிருந்தார். படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் என்பதால் கங்குவாவை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.