தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாங்க சொல்ற வரைக்கும் எந்த படத்தையும் எடுக்கக் கூடாது.. மீண்டும் ஆர்டர் போட்ட தயாரிப்பாளர் சங்கம்

நாங்க சொல்ற வரைக்கும் எந்த படத்தையும் எடுக்கக் கூடாது.. மீண்டும் ஆர்டர் போட்ட தயாரிப்பாளர் சங்கம்

Oct 29, 2024, 09:15 PM IST

google News
மறு அறிவிப்பு வரும் வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. (facebook)
மறு அறிவிப்பு வரும் வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டாம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் பெரிய பட்ஜெட் படங்கள், நடிகர்களின் சம்பள உயர்வு, திட்டமிடப்பட்ட நாட்களைக் கடந்து படப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை

இந்த பிரச்சனைகளை விரைந்து சரிசெய்ய தேனாண்டாள் முரளி தலைமையிலான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

சுமூகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையல் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

படப்பிடிப்பை தொடங்க வேண்டாம்

அதன்படி, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

முழுமையான பேச்சுவார்த்தை

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில் பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது. இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமையாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம். நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம் எனக் குறிப்பிட்டிருந்தது.

பழைய படங்களுக்கு பிரச்சனை இல்லை

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் புதிதாக தயாரிக்கப்படும் படங்களுக்கு மட்டுமே. இந்த அறிவிப்பிற்கு முன்னரே எடுத்துக் கொண்டிருக்கும் படங்களின் பணிகளை படக்குழுவினர் எவ்விதத் தடையும் இன்றி தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கங்களின் கெடுபிடிகளால், இனி அதிக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், தனுஷ், நயன்தாரா, தமன்னா, சமந்தா, திரிஷா போன்ற நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் படங்களில் நடிப்பதில் பிரச்சனை ஏற்படலாம். அதே சமயம், இனி தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

எது எப்படி இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த அறிவிப்பு வெளியான பின்னரே அனைத்தையும் உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி