Dhanush : தனுஷால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமா.. நடிகர் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush : தனுஷால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமா.. நடிகர் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!

Dhanush : தனுஷால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமா.. நடிகர் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 02, 2024 05:31 PM IST

Dhanush : 29.07.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், நடிகர் தனுஷ் அவர்கள் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தனுஷால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமா.. நடிகர் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!
தனுஷால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமா.. நடிகர் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர்கள் சங்கம்!

" 29.07.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், நடிகர் தனுஷ் அவர்கள் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

ஏனெனில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5-நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தி அப்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சனை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதித்து தீர்வு எடுத்து கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.

அதே போல் 01.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் (New Guideline) தொடர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு (Joint Action Committee) தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் முதல் போடும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்து திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதத்தில் நியாயமாகும்?

தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது காலங்காலமாக இருந்து வருவது மரபு. அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்து கொடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கை தவறானது கண்டனத்திற்குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதை வாபஸ் பெற வேண்டும்.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இனி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் படம் நடிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். எங்களது தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கால்ஷீட் நாட்களை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொடுங்கள் என்று தெரிவிக்கின்றோம். ஆனால் நடிகர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.

தயாரிப்பாளர்களால் இயலவில்லை

எப்படி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை பாதுக்காக்கிறார்களோ. அதே போல்  எங்களது சங்க உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.

நடிகர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தினை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.

மேலும், கடந்த 6-மாத காலத்தில் தயாரிப்பாளர்கள், தங்களது திரைப்படங்களை வியாபாரம் செய்ய OTT-தளம் மற்றும் Sattilitte என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர்களை காப்பாற்றிடவும். எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.