இந்திய சினிமாவின் நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்தவர்! நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!
Nov 07, 2024, 07:24 AM IST
இவரின் ஒவ்வொரு முக பாவனைகள் மட்டுமே போதும் அந்த காட்சியின் தாக்கத்தை நம்மூள் கடத்துவதற்கு. இந்த உன்னதமான கலைஞர் இன்று அவரது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தன் நிறத்தால் ஒடுக்கப்பட்டாலும், நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியவர் தான் நடிகை நந்திதா தாஸ், இந்தியர்கள் நிற வெறியர்கள் அது அவர்களிடம் வேரூன்றி கிடக்கிறது என வெளிப்படையாக கூறியவர். இந்திய சினிமாவில் காலம் காலமாக கடைபிடித்து வரும் கதாநாயகிக்கு என இருந்த கட்டமைப்பை உடைத்த ஒரு சிலரில் முக்கியமாக குறிப்பிடப்படவேண்டியவராக இருக்கிறார் நந்திதா. இவரின் ஒவ்வொரு முக பாவனைகள் மட்டுமே போதும் அந்த காட்சியின் தாக்கத்தை நம்மூள் கடத்துவதற்கு. இந்த உன்னதமான கலைஞர் இன்று அவரது 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழில் நந்திதா
தமிழ், தெலுங்கு, உருது, ஒரியா, கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட 10 க்கும் மேற்பட்ட மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த மாபெரும் தனது திரை பயணத்தில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் தமிழ் மொழியில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டாள், விஷ்வ துளசி மற்றும் நீர்பறவை என 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த 4 படங்களே இவரை தமிழ் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது.
இயக்குனர் தங்கர் பச்சானின் அழகி படத்தில் இவர் நடித்த தனலட்சுமி கதாபாத்திரத்தில் இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு கச்சிதமாக பொருந்தி போக முடியாது. வாழ்க்கையில் தோற்று இருக்கும் சமயத்தில் பழைய காதலனை சந்திக்கும் போதும், கற்பனையாக கனவு காணும் போதும் என பார்க்கும் ரசிகர்களின் மனதை கலங்க வைத்திருப்பார். கன்னத்தில் முத்தமிட்டாள் இவருக்கு கிடைத்த மற்றொரு அல்வா, நாட்டின் விடுதலைக்காகவும் இறந்த கணவனிற்காகவும் பெற்ற குழந்தையை விட்டு செல்வார். அதே குழந்தை என்னை ஏன் விட்டு சென்றீர்கள் என கேட்கும் போது அவரது பரிதவிப்பு போதும் அவரது சிறந்த நடிப்பிற்கு. நீர் பறவை படத்தில் முதலில் நந்திதாவை ஹீரோவின் தாய் கதாபாத்திரத்தில் தான் நடிக்க வைக்க இருந்தார்களாம். பின்னர் அதனை விட அழுத்தமாக இருக்கும் எனக் கூறி ஹீரோயினின் வயதான பாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.
இயக்குனராக
நந்திதா நடிப்பை போலவே இயக்குனராகவும் அவர் நிரூபித்துள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ஃபிராக் என்ற படம் உலக அளவில் பேசப்பட்டது. இப்படம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இது 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை சம்பவங்களை வைத்து உருவானது. புகழ்பெற்ற உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை மையப்படுத்தி இவர் இயக்கிய மண்டோ திரைப்படமும் உலகளவில் புகழ்பெற்றது. நவாசுதீன் சித்திக் இந்தப் படத்தில் மண்டோவாக நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக கரோனா காலத்தில் இவரது இயக்கத்தில் வெளியான Listen To Her என்கிற குறும்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் இவர் இயக்கிய ஸ்விகாட்டோ என்கிற படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது. டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதையை படமாக்கி இருக்கிறார்.
இந்தியாவின் நிறவெறி
இந்தியாவில் சினிமாவில் நடிப்பது இவருக்கு கடினமாகவே இருந்தது. எப்போதும் தன்னை நிறம் காரணமாக அவமானப்படுத்துவதாகவும் தெரிவிப்பார். இது குறித்து 'இந்தியாஸ் காட் கலர்' என்ற இரண்டு நிமிட பொது சேவை அறிவிப்பு இசைக் காணொளி ஒன்றைத் தயாரித்தார். இந்த இசைக்காணொளி நிறப் பிரச்சினையைப் பற்றியது. இவர் நிறம் குறித்து பேட்டி ஒன்றிலும் கூறியிருப்பார். அதில்”கடைகளில் நான் அழகு சாதன பொருட்களிடம் செல்லும் போது உடனே அங்கிருக்கும் கடை ஊழியர்கள் நான் வெள்ளை ஆவதற்கு பயன்படும் என்று கூறி க்ரீம்களை எடுத்து நீட்டுவர். நான் அவர்களிடம் இந்த உடம்பிலேயே பிறந்தேன்; இந்த உடம்பிலேயே இறப்பேன். ஆகையால் என்னை வெள்ளையாக்கும் எதையும் எனக்கு தயவு செய்து தர வேண்டாம் என்று கூறினேன்” என்று பேசினார்.
நடிப்பு, இயக்கம் தவிர எழுத்து துறையிலும் சாதித்தவர். இவர் எழுதிய முதல் புத்தகம் 'மான்டோ & ஐ'. இந்த புத்தகம் திரைப்படத்தை உருவாக்கும் அவரது 6 வருட நீண்ட பயணத்தை விவரிக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் குழந்தைகள் உரிமைகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு, பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்டவற்றிற்காக குரல் கொடுத்து வருகிறார். இது மட்டுமன்றி தோல்நிற பாகுபாட்டிற்கு எதிராக ‘கறுப்பு அழகானது’ என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்து இருக்கிறார். நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாளான இன்று அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்