Sudeep: வில்லனாக பிரபலமாக்கிய நான் ஈ.. கன்னட சினிமாவின் மாஸ் நடிகர் சுதீப்பின் பிறந்தநாள்
Sep 02, 2024, 07:29 AM IST
Sudeep: வில்லனாக பிரபலமாக்கிய நான் ஈ.. கன்னட சினிமாவின் மாஸ் நடிகர் சுதீப்பின் பிறந்தநாள் குறித்து அறிவோம்.
Sudeep: பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன்மூலம் பிரபலமானவர், நடிகர் சுதீப். இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படும்வேளையில் அவர் பற்றி அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான தகவல்கள் உள்ளன.
கன்னடத் திரைப்பட உலகில் பிரபல நடிகர், சுதீப். இவர் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகாவில் சஞ்சீவ் மஞ்சப்பா மற்றும் சரோஜா ஆகியோருக்கு செப்டம்பர் 2ஆம் தேதி,1971ஆம் ஆண்டு பிறந்தார் . முன்னதாக இவரது குடும்பம் சிக்மங்களூர் மாவட்டம், நரசிம்மராஜபுரத்தில் இருந்து ஷிமோகாவிற்கு குடிபெயர்ந்தது. பெங்களூரில் உள்ள தயானந்தசாகர் பொறியியல் கல்லூரியில் தொழில்துறை மற்றும் உற்பத்திப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், நடிகர் சுதீப்.
திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு இவர் பின்னணிப் பாடகராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். கர்நாடக அரசின் திரை விருதைப் பெற்றவர். சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நான் ஈ திரைப்படம் தந்த திருப்பம்:
கன்னடத்திரையுலகில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தும் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார், நடிகர் சுதீப். குறிப்பாக 2012ஆம் ஆண்டு வெளியான நான் ஈ(ஈகா) படத்தில் வில்லனாக நடித்து தமிழ்நாட்டிலும் பிரபலமானார். இவருக்கு பான் இந்தியா அளவில் ரசிகர்கள் கிடைத்தனர்.
கன்னட சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சுதீப், 2013ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகராக இவர் திகழ்கிறார். நடிகர் சுதீப், நான்கு தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கன்னடத் திரைப்படங்களான ஸ்பர்ஷா (2000), ஹுச்சா (2001), நந்தி (2002), கிச்சா (2003), சுவாதி முத்து (2003), மை ஆட்டோகிராஃப் (2006), எண் 73, சாந்தி நிவாசா (2000 ) ஆகிய கன்னடத் திரைப்படங்களில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. அவர் தனது நந்தி, ஹுச்சா மற்றும் சுவாதி முத்து ஆகியப் படங்களுக்காக தொடர்ந்து மூன்று வருடங்கள் கன்னடத்தில் சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார்.
கன்னட பிக்பாஸ் தொகுப்பாளர் சுதீப்:
2013ஆம் ஆண்டு முதல், நடிகர் சுதீப் கன்னடத்திற்கான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் . 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்,ஹுச்சா. இப்படத்தின் மூலம் தான் கிச்சா சுதீப் என்ற புனைப்பெயரைப் பெற்றார். அந்த அளவுக்கு படம் ஹிட் கொடுத்தது.
சுதீப் தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ தமிழிலும் வெளியானது. இப்படத்தை தமிழர்களான அலங்கார் பாண்டியன் இணைத்தயாரிப்பு செய்திருந்தனர்.
நடிகர் கிச்சா சுதீப்பின் 46ஆவது படமான மேக்ஸ் திரைப்படத்தை, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு, மாமல்லபுரத்தில் நடந்து முடிந்துள்ளது. இதற்காக இதுவரை பிரமாண்ட போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில், கிச்சா சுதீப்பின் 47ஆவது படமும்; கே.ஆர்.ஜி. ஸ்டுடியோஸ் சார்பில், கிச்சா சுதீப்பின் 48ஆவது படமும் தயாரிப்பு நிலையில் இருந்து வருகிறது. இந்தப் படங்களுக்கும் பெயரை, தயாரிப்புக்குழு இன்னும் வெளியிடவில்லை.
அதன்பின், அனூப் பண்டரி இயக்கத்தில் பில்லா ரங்கா பாட்ஷா என்னும் படத்திலும், இயக்குநர் சந்துருவின் இயக்கத்தில் கப்ஸா 2 என்னும் படத்திலும் நடிகர் கிச்சா சுதீப் நடித்து வருகிறார்.
இப்படி கர்நாடக சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து கன்னடத்திரையுலகில் உச்ச நடிகராகத் திகழும் நடிகர் சுதீப் என்கிற கிச்சா சுதீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமை அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
டாபிக்ஸ்