Rishab Shetty: ஓடிடி தளங்கள் கன்னடப் படத்தை வாங்குவதில்லை.. அதனால் தான் இதைச் செய்யவேண்டியிருக்கு - ரிஷப் ஷெட்டி வேதனை
Rishab Shetty: ஓடிடி தளங்கள் கன்னடப் படத்தை வாங்குவதில்லை எனவும், அதனால் தான் இதைச் செய்யவேண்டியிருக்கு என நடிகர் ரிஷப் ஷெட்டி வேதனை தெரிவித்துள்ளார்.
Rishab Shetty: 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இயக்குநர் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, முக்கிய ஓடிடி தளங்கள் பொதுவாக ஸ்ட்ரீமிங்கிற்காக கன்னடத் திரைப்படங்களை வாங்காததால் இனி ஃபெஸ்டிவலுக்கான படங்களை உருவாக்கமாட்டேன் என்று உருக்கமாகக் கூறினார்.
தேசிய விருதுகளை திரைப்பட நடுவர் குழுவின் தலைவர் ராகுல் ராவல் டெல்லியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிவித்தார். 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
'யூடியூப் சேனல்களில் கன்னடத் திரைப்படத்தை வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’:
கன்னடத் திரைப்படமான காந்தாரா, 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.305 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.
’காந்தாரா’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரிஷப் ஷெட்டி பத்திரிகையாளர்களிடம் பேசினார்.
அதில்,"நாங்கள் திரைப்பட விழாக்களில் திரையிடுகிறோம். திரைப்பட விருதுகளை வெல்கிறோம். ஆனால், அதன்பின் எந்த ஒரு ஓடிடி தளமும் படத்தை வெளியிட எங்களுக்கு கிடைக்கவில்லை. ஓடிடி தளங்கள் கன்னட மொழித்திரைப்படங்களை வாங்குவதில்லை. எனவே, அதை யூடியூப் சேனல்களில் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, அந்த வரலாற்றை நான் முடித்துவிட்டேன். திரைப்பட விழாக்களுக்கு எடுக்கப்படும் படத்தால் எங்களுக்கு எதுவும் மீண்டும் கிடைப்பதில்லை" என்று ரிஷப் ஷெட்டி கூறினார்.
இதுபோன்ற மூன்று திருவிழா படங்களில் தான் இதுவரை நடித்துள்ளதாக ரிஷப் கூறினார்
"மேலும் எனது தயாரிப்பில் இரண்டு திரைப்படத் திருவிழாவில் காட்சிப்படுத்த தகுதியான படங்கள் ரிலீஸாக தயாராகவுள்ளன. பெட்ரோ மற்றும் வாகச்சிபானி என்பன அப்படத்தின் பெயர்கள். ஏனென்றால் அவை எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தன. அதற்கு எதையாவது திருப்பிக்கொடுக்க விரும்பி, திரைப்படத் திருவிழா சார்ந்த படங்களை நான் தயாரிக்கிறேன். எதிர்காலத்தில் அது எவ்வாறு செல்கிறது என்பதை நான் பார்க்கப்போகிறேன்" என்று நடிகர் ரிஷப் ஷெட்டி மேலும் கூறினார்.
மேலும் பேசிய ரிஷப், ‘’சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருதையும் காந்தாரா வென்றது. இந்த விருதை வெல்வேன் என்று எதிர்பார்க்கவும் இல்லை. அதை வெல்வேன் என்ற உற்சாகமும் இல்லை’’ என்று கூறினார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி கூறியதாவது,"நான் எனது வேலையை மட்டுமே செய்கிறேன். ஆனால், காந்தாராவின் வெற்றி அதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் செல்ல வேண்டும். நான் அதன் ஒரு முகம் மட்டுமே. ஆனால், படத்திற்காக தங்கள் சிறந்ததைக் கொடுத்த தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறைய பேர் எங்களுடன் இருந்தனர். அவர்கள் சார்பாக மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
அதேபோல், கன்னட ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அவர்கள்தான் படத்தை பான் இந்தியா தளத்திற்கு கொண்டு சென்றனர் என்றார்.
ரிஷப் ஷெட்டியும் ராஷ்மிகா மந்தனாவும்:
முன்னதாக ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகா மந்தனாவை மறைமுகமாக விமர்சித்து பெயர் பெற்றார். அதாவது, காந்தாரா வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு, கன்னடத் திரையுலகத்தை விட்டுவிட்டு வேறு ஒரு திரையுலகத்தில் இருக்கும் நபராக நான் இருக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
கன்னட சினிமாவின் முக்கிய பங்களிப்புகள்:
கன்னட திரையுலகம் இந்த முறை பெரிய சினிமா வெற்றிகளைக் கொண்டுள்ளது. சிறந்த நடிகர் மற்றும் சிறந்த ஜனரஞ்சகத் திரைப்படம் தவிர, சிறந்த அதிரடி நடன அமைப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் பஸ்தி தினேஷ் ஷெனாய் (மத்யந்தாரா), சிறந்த படத்தொகுப்பு (மத்யந்தாரா), சிறந்த கலை கலாசார திரைப்படம் (சுனீல் புராணிக்), 'ரங்க விபோகம்' (ரங்க விபோகம்) ஆகியவையும் விருதுகளையும் வென்றது.
ஹோம்பாலே நிறுவனம் தயாரித்த கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 சிறந்த கன்னடப் படத்திற்கான விருதையும் வென்றது.