HBD Revathi: 3 தேசிய விருது.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. 80-களில் முன்னணி நடிகை ரேவதிக்கு பிறந்தநாள்
Jul 08, 2024, 07:25 AM IST
HBD Revathi: 3 தேசிய விருது வாங்கியவர், கோலிவுட் முதல் பாலிவுட் வரை என 80-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ரேவதிக்கு பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் தொடர்பான கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
HBD Revathi: நடிகை ரேவதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி திரைப்படங்களில் நடித்து முன்னணியாகத் திகழ்ந்தவர். இதுவரை மூன்று தேசிய விருதுகளையும் ஆறு ஃபிலிம்பேர் விருதுகளையும், ஒரு கேரள அரசின் மாநில விருதினையும் வென்ற நல்ல நடிகையாகத் திகழ்ந்தார், ரேவதி. இன்று தனது 58ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார், நடிகை ரேவதி. அவர் குறித்து அறிந்துகொள்ள நம்மிடம் ஏராளமான சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த நடிகை ரேவதி?:
நடிகை ரேவதியின் இயற்பெயர் ஆஷா கேளுன்னி அல்லது ஆஷா குட்டி கேளுன்னி. இவரது தந்தையின் பெயர் மலாங் கேளுன்னி நாயர். இவர் இந்திய ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றியவர். இவரது தாயின் பெயர் லலிதா கேளுன்னி. இவரது தந்தையும் தாயும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர்.
இவர் தனது பள்ளிப் பருவத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஃபேஷன் ஷோவில் பங்கெடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட குழுப் புகைப்படங்களில் ஒன்று ஒரு தமிழ் இதழில் அட்டைப்படமாக வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, தன்னுடைய ‘மண் வாசனை’ திரைப்படத்தில் ரேவதி என்னும் திரைப்படப் பெயரை சூட்டி, கதாநாயகியாக நடிக்க வைத்தார்.
திரைப்புமுனை தந்த சினிமா வெற்றி:
நடிகை ரேவதி, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான மண் வாசனை திரைப்படமானது 1983ஆம் ஆண்டு வெளியாகி, வெள்ளி விழா கண்டது. இதன்மூலம் முதல் படத்திலேயே ஒரு வலுவான கால்தடத்தைப் பதித்தார், நடிகை ரேவதி. மேலும் இப்படம் ஃபிலிம்பேர் சவுத்துக்கான ஸ்பெஷல் விருதை வென்றது. அடுத்து மலையாளத்தில் ‘கட்டத்தே கிள்ளிக்கோடு’ என்னும் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும், ’சீதாம்மா பெல்லி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார், நடிகை ரேவதி.
முக்கிய இயக்குநர்களின் ஆஸ்தான நடிகையான ரேவதி:
அதன்பின் மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடித்த ‘கை கொடுக்கும் கை’ திரைப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து கவனம் ஈர்த்தார். அடுத்து பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘புதுமைப்பெண்’, ஆர். சுந்தர்ராஜனின் இயக்கத்தில் ‘வைதேகி காத்திருந்தாள்’ என அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியாக இருந்தார். அதன்பின் மணி ரத்னத்தின் ‘மெளன ராகம்’ திரைப்படமும், கமல்ஹாசனின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.
நடிகை ரேவதி முதன்முறையாக ’கக்கோத்திகாவிலே அப்போபன் தாடிகல்’ என்னும் படத்துக்காக முதல் தேசிய விருதையும், அதன்பின், 1990ஆம் ஆண்டு ‘கிழக்கு வாசல்’என்னும் திரைப்படத்துக்காக தமிழில் முதல் தேசிய விருதையும் வென்றார். பின், தமிழ் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் பாலிவுட்டில் சல்மான் கானின் ‘லவ்’திரைப்படத்தில் அவரது கதாநாயகியாக நடித்தார். அடுத்து தமிழில் ‘தேவர் மகன்’திரைப்படத்தில் நடித்தமைக்காக, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார், நடிகை ரேவதி. இடையே, அஞ்சலி, 1994ஆம் ஆண்டு மகளிர் மட்டும், எனப் பல்வேறு படங்களில் நடித்திருந்தார், நடிகை ரேவதி.
சமீபத்தில் ரேவதி, தனுஷ் இயக்கத்தில் ப. பாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். பல்வேறு திரைப்பட விழாக்களில் நடுவராக இருந்து பணியாற்றியிருக்கிறார்.
நடிகை ரேவதியின் தனிப்பட்ட வாழ்க்கை:
நடிகை ரேவதி, சுரேஷ் சந்திர மேனன் என்னும் ஒளிப்பதிவாளரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின், 2002ஆம் ஆண்டு முதல் சில கருத்து வேற்றுமைகளால் பிரிந்து வாழ்ந்து வந்த ரேவதி - சுரேஷ் சந்திர மேனன் தம்பதியினர் 2013ஆம் ஆண்டு மனம் ஒத்து பிரிந்தனர்.
அதன்பின், 2018ஆம் ஆண்டு தனக்கு மஹி என்ற 5 வயது மகள் இருப்பதாக ரேவதி கூறினார். இக்குழந்தையை ரேவதி செயற்கை கருவூட்டல் முறையில் பெற்று எடுத்தார்.
டாபிக்ஸ்