தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Swathi: அழகிய தெத்துப்பல்.. கண்கள் இரண்டால் பலரை கட்டியிழுத்த சுவாதியின் பிறந்தநாள்

HBD Swathi: அழகிய தெத்துப்பல்.. கண்கள் இரண்டால் பலரை கட்டியிழுத்த சுவாதியின் பிறந்தநாள்

Marimuthu M HT Tamil

Apr 19, 2024, 07:59 AM IST

google News
நடிகை சுவாதியின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை இதோ..
நடிகை சுவாதியின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை இதோ..

நடிகை சுவாதியின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை இதோ..

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரை அவரது அழகிய கண்கள், தெத்துப்பல் மற்றும் நடிப்பால் கட்டியிழுத்த நடிகை சுவாதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் அறிந்துகொள்வோம். 

யார் இந்த சுவாதி? சுவாதி, 1987ஆம் ஆண்டு, ஏப்ரல் 19ஆம் தேதி அன்றைய சோவியத் யூனியனில் இருக்கும் விளாடிவோஸ்டாக் நகரில் பிறந்தவர். சுவாதியின் தந்தை இந்திய கப்பல்படையில் இருந்தபோது, ரஷ்யாவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சுவாதி அங்கு பிறந்தார். இவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர், சுவாதிக்கு வைத்த பெயர், ‘சுவெட்லனா’. ஆனால், அவரது தாய், அவரது பெயரை சுவாதி என மாற்றினார். அதன்பின், சுவாதியின் குடும்பம் மும்பைக்கும், அதன்பின், விசாகப் பட்டினத்துக்கும் குடிபெயர்ந்தது. அதனால், சுவாதியின் குழந்தைப் பருவம் இந்த இரண்டு நகரங்களில் தான் இருந்தது. குறிப்பாக, சுவாதி, விசாகப்பட்டினத்தில் உள்ள புனித பிரான்ஸிஸ் டிசேல்ஸ் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை பயின்றார். 11, 12ஆம் வகுப்பினை ஹைதராபாத்தில் முடித்த சுவாதி, அதன்பின், ஹைதராபாத்தில் இருக்கும் புனித மேரி கல்லூரியில் பயோடெக்னாலாஜி படிப்பினைமுடித்தார்.

கல்லூரியில் படிப்பதற்கிடையே தனது 17 வயதில், தனியார் தொலைக்காட்சியில் ‘கலர்ஸ்’ என்னும் நிகழ்ச்சியை தெலுங்கு மொழியில் தொகுத்து வழங்கினார். 150க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கியிருப்பதால், ‘கலர்ஸ்’ சுவாதி என செல்லமாக தெலுங்கு மொழி பேசும் மக்களால் அழைக்கப்படுகிறார்.

திரை வாழ்க்கை: கல்லூரியில் முதலமாண்டு படித்து முடித்ததும், தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘டேஞ்சர்’என்னும் படத்தில் ஐந்து பேரில் ஒருவராக நடித்து, சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பின், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, யாரடி நீ மோகினி திரைப்படத்தின் முதல் வெர்ஷனான தெலுங்கு படம் ‘ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தலே வேறுலே’ என்னும் படத்தில் பூஜா என்னும் கேரக்டரில் நடித்துப் பலரையும் ஈர்த்தார்.

இதன்மூலம் தென்னிந்திய முழுக்க கவனம்பெற்றார், சுவாதி. அதன்பின் சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க கமிட் ஆன சுவாதி, அதன்பின், சிறப்பாக நடித்து, தனது முதல் தமிழ்ப்படமான சுப்பிரமணியபுரம் படத்திலேயே முத்திரைப் பதித்தார். இப்படத்தில் சுவாதி நடித்த துளசி என்னும் கதாபாத்திரமும், ’கண்கள் இரண்டால்’ பாடலில் தெத்துப்பல்லில் இவர் காட்டிய அபிநயமும் பலரையும் ஈர்த்தது.

அதன்பின், தென்னிந்திய மொழிகள் பலவற்றில் கதாநாயகியாக நடித்தார், சுவாதி. குறிப்பாக அவரது தாய் மொழியான தெலுங்கிலும் ‘அஸ்த சம்மா’ என்னும் படம் மூலம் கதாநாயகி ஆனார். அதன்பின் தெலுங்கில் ‘கலவரமயே மடிலோ’,’கோல்கொண்டா ஹை ஸ்கூ’, ’கதா ஸ்கிரீன்பிளே தர்ஷக்ட்வம் அப்பளராஜூ’, ‘மிரப்பகாய்’, ‘கண்டீரிக’, ‘ஸ்வாமி ரா ரா’, ’பங்காரு கோடிபெட்டா’, ‘கார்த்திகேயா’, ‘திரிபுரா’, ’லண்டன் பப்லு’, ‘பஞ்ச தந்திரம்’, ‘மத் ஆஃப் மது’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சுப்ரமணியபுரம் படத்துக்குப் பின், நடிகை சுவாதி, தமிழில் கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை, திரி ஆகியப் படங்களில் நடித்துள்ளார். அதேபோல் மலையாளத்தில் ஆமேன், நார்த் 24 கதாம், மோசயிலே குதிர மீனுகள், அது ஒரு பஹீகர ஜீவியனு, டபுள் பரேல், திருச்சூர் பூரம் ஆகியப் படங்களில் நடித்துள்ளார்.

திருமண வாழ்க்கை: சுவாதி தனது நீண்டநாள் காதலரான விகாஸ் வாசு என்னும் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பைலட்டை, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

வாழ்க்கையில் எத்தனை படங்களில் நடித்தாலும் தமிழில் சுவாதி நடித்த சுப்ரமணியபுரம் படமும், துளசி கதாபாத்திரமும் தான், இவரது நிரந்தர அடையாளங்கள். இன்று அவருக்குப் பிறந்த நாள். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி