Niraikudam: சிவாஜி செய்யும் சேட்டையால் நிகழும் விபரீதம்..! க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் - மகேந்திரன் கதையில் வசூல் அள்ளிய படம்
Aug 08, 2024, 03:11 PM IST
சிவாஜி செய்யும் சேட்டையால் நிகழும் விபரீதம், க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் என மறைந்த இயக்குநர் மகேந்திரன் கதையில் வசூல் அள்ளிய படம் தான் நிறைகுடம். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ படத்தில் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் முக்கிய படைபாளிகளாக திகழ்ந்து மறைந்த இயக்குநர் மகேந்திரன் கதை, சோ ராமசாமி திரைக்கதை மற்றும் வசனம், முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான காதல் காமெடி கலந்த படம் நிறைகுடம். காமெடி படங்களுக்கு பெயர் போன முக்தா சீனிவாசன் இந்த படத்தை காமெடியுடன், சீரியஸான கதையாகவும் உருவாக்கியிருப்பார்.
படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ இணைந்து நடித்திருப்பார்கள். மற்ற நடிகர்களாக ஆர். முத்துராமன், மேஜர் சுந்தரராஜன், வி.கே. ராமசாமி, சோ, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சச்சு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
வினையாகும் விளையாட்டு
ஒரே கல்லூரியில் கண் மருத்துவம் பயின்று வரும் சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஆகியோர் நட்பாக பழகி, பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. வாணிஸ்ரீயின் அண்ணனாக வரும் முத்துராமனை வைத்து பிராங்க் ஒன்றை செய்கிறார் சிவாஜி கணேசன்.
அது வினையாகிபோக விபத்தில் சிக்கி முத்துராமன் உயிரிழக்கிறார். வாணிஸ்ரீ பார்வை பறிபோகிறது. இந்த விபத்தை சிவாஜி தான் திட்டமிட்டு கொலை செய்ததாக வாணிஸ்ரீ நம்புகிறார்.
பின்னர், வேறொரு பெயரில் டாக்டராக வாணிஸ்ரீ சந்திக்கு சிவாஜி கணேசன் அவரை திருமணமும் செய்து கொள்கிறார். இறுதியில் வாணிஸ்ரீ இழந்த கண் பார்வை மீண்டும் பெற்ற பின்னர் உண்மை அனைத்தும் தெரியவர என்ன நடந்தது என்பதை காதல், காமெடி கலட்டாவுடன் தொடங்கி சுபமாக முடித்திருப்பார்கள்.
குறும்புத்தனம், சீரியஸ், எமோஷன் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் சிவாஜி கணேசன் வழக்கம் போல் தனது நவரச நடிப்பில் முத்திரை பதித்திருப்பார். வாணிஸ்ரீயும், அவருக்கு போட்டியாக நடிப்பில் கலக்கியிருப்பார்.
வாணிஸ்ரீக்கு உதவிய சிவாஜி
முதல் பாதியில் துடுக்கான கல்லூரி மாணவியாகவும் இரண்டாம் பாதியில் பார்வையற்ற பெண்ணாகவும் தோன்றியிருப்பார் வாணிஸ்ரீ. முதல் முறையாக கண் தெரியாதவராக நடித்த வாணிஸ்ரீக்கு நடிப்பு, பாடிலாங்குவேஜ் என பல விஷயங்களை கற்று கொடுத்து உதவியுள்ளார்.
இதுபற்றி நடிகை வாணிஸ்ரீயே பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "சிவாஜி சார் சஞ்சீவி மலை மாதிரி. அந்த மலைலேருந்து வர்ற ஒருதுகள் கூட மருத்துவ குணம் கொண்டதாத்தான் இருக்கும். நடிப்பும் அப்படித்தான்.
முதன்முதல்ல, பார்வையற்ற கேரக்டரை நடித்த நான், சிறப்பாக செஞ்சதுக்கு முழு காரணம் அவர்தான். சிவாஜி சார் செட்டுக்குள்ளே வந்தாலே வெளியே போக மாட்டார்.
டைரக்டர் ‘பேக் அப்’னு சொன்னபிறகுதான் கிளம்புவார். மத்தவங்க நடிக்கிறதையெல்லாம் பாத்துக்கிட்டே இருப்பார். நான் பேசுற தமிழையும் அந்த உச்சரிப்பையும் முகபாவங்களையும் கவனிச்சுப் பாராட்டுவார்.
கதைப்படி நடுவுல எனக்கு பார்வைபோயிரும். அப்ப எப்படி நடக்கணும். பார்வையற்றவர் போல் முகத்தை எப்படி வைச்சுக்கணும், கண்களை எப்படி வைக்கணும் என்றெல்லாம் சிவாஜி எனக்கு சொல்லிக்கொடுத்தார். அதை என்றைக்கும் மறக்கவே முடியாது" என்று கூறியுள்ளார்.
சோ செய்த திரை மறைவு விஷயம்
படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீயை வர்ணித்து பேசுவது போன்ற வசனம் இடம்பெறும். இதற்கு அழகு தமிழ் உச்சரிப்புடன் கூடிய வசனங்களை கண்ணதாசனிடம் எழுது வாங்கி பயன்படுத்தியுள்ளார்.
இந்த திரை மறைவு விஷயத்தை கண்டுபிடித்த சிவாஜி, உனக்கு இப்படியெல்லாம் எழுத வராதே என கூறி உரிமையுடன் செல்ல கோபமும் சோவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத வி. குமார் இசையமைப்பில் மூன்று பாடல்கள் படத்தில் இடம்பிடித்திருக்கும். இவை அனைத்தும் அந்த காலகட்டத்தில் ஹிட்டாகின
குறுகிய நாளில் வசூலை அள்ளிய படம்
நிறைகுடம் படம் 1969இல் வெளியானது. இதே ஆண்டில் சிவாஜி கணேசன் மொத்தம் 8 படங்களில் நடித்தார். ஜனவரி தொடங்கி ஒவ்வொரு மாதமும் அவரது படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகி கொண்டிருந்தனர். ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து நல்ல வசூலையும் ஈட்டியது.
இந்த படத்தை தொடர்ந்து சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த தெய்வ மகன் படம் செப்டம்பரில் வெளியானது. அந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையிலும், நிறைகுடம் வெளியாகி ஒரு மாத இடைவெளியிலேயே அந்த படமும் வெளியானது இதன் வெற்றியை தெய்வமகன் ஓவர்டேக் செய்தது. இருந்த போதிலும் 30 நாள்களிலேயே நல்ல லாபத்தை பெற்று தந்தது. நீண்ட நாள் இந்த படம் ஓடாத காரணத்தால் நிறைகுடம் படத்தை பிளாப் படம் என்றும் பலர் கூறுவதுண்டு.
ஆனால் சிவாஜியின் ஹிட் படங்களில் ஒன்றாகவும், தனது அற்புத நடிப்பால் ரசிகர்களுக்கு விருந்து படத்தை படமாகவும் இருக்கும் நிறைகுடம் வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்