HBD Sivaji Ganesan: மறக்க முடியுமா? - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Sivaji Ganesan: மறக்க முடியுமா? - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று!

HBD Sivaji Ganesan: மறக்க முடியுமா? - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Oct 01, 2023 05:00 AM IST

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த சுவாரஸ்யமான சில தகவலை இங்கு பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 01)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 01)

திரையுலகில் வி.சி. கணேசனாக, அதாவது விழுப்புரம் சின்னய்யா கணேசனாக அறிமுகமாகி, பின்னர் சத்ரபதி சிவாஜி நாடகத்தில் நடித்தார். அதன்பிறகே 'சிவாஜி கணேசன்' என அழைக்கப்பட்டார்

'சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்' மூலம் கணேச மூர்த்தி, 'சிவாஜி' கணேசனாக மாறிய பிறகு அவரது முதல் திரைப்படமான 'பராசக்தி' 1952-ல் வெளியானது. கலைஞர் வசனத்தில் நீதிமன்ற கூண்டில் நின்று சிவாஜி பேசும் வசனங்கள் அறிமுக படத்திலேயே அவருக்கான அடையாளமாக மாறியது. இன்று வரை கலைஞரின் வசனத்தை சிவாஜி பேசியது திரையுலகில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில்தான் உள்ளது.

இதைத்தொடர்ந்து வரிசையாக 'கர்ணன்', 'திருவிளையாடல்', 'வீர பாண்டிய கட்டபொம்மன்', 'மனோகரா', 'அன்னையின் ஆணை', 'அன்பு', 'இரத்ததிலகம்' என பல படங்களில் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

ஒருமுறை அமெரிக்காவின் சார்பில் ஜனாதிபதி ஜான் கென்னடியின் மிக மிக முக்கிய விருந்தாளியாக கலாச்சார பரிமாற்றத்தின் கீழ் அமெரிக்காவிற்கு சிவாஜி சென்றார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அரை அடி நீளமுள்ள பெரிய சாவியை நயாக்ரா மேயர் சிவாஜியிடம் கொடுத்து நாளை காலை வரை ஒரு நாள் மேயராக நீங்கள் இருங்கள் என்றார். இந்திய மக்களின் சார்பில் அமெரிக்க நாட்டில் உள்ள நயாகராவில் சிட்டி மேயராக இருந்த இரண்டுபேர்தான். அதில் ஒருவர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு, மற்றொருவர் சிவாஜி கணேசன்.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் மிகச் சிறந்த நடிகர்களுக்கு வழங்கப்படும் சொவாலியே விருது சிவாஜியை தேடி வந்தது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். 1957ல் வெளிவந்த 'வணங்கா முடி' படத்திற்காக இவருக்கு மிகப்பெரிய கட்டவுட் வைக்கப்பட்டது. இவர் நடித்த 'கப்பலோட்டியத் தமிழன்', 'இராஜராஜ சோழன்', 'வீரபாண்டிய கட்டபொம்மன்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறது.

திரைத்துறையில் இருந்து அரசியல் களத்தில் நடிகர்கள் கோலோச்சி கொண்டிருந்த காலக்கட்டத்தில் சிவாஜி கணேசனும் அரசியல் களத்தில் இறங்க தவறவில்லை. 'தமிழக முன்னேற்ற முன்னணி' என்ற கட்சியை நிறுவினார். ஆனால், சினிமா களத்தில் வெற்றி கண்டவருக்கு அரசியல் களம் கைகொடுக்கவில்லை. பெருந்தலைவர் காமராஜர் மீது அதீத பிரியம் கொண்டவர்.

சிவாஜி கணேசனின் நடிப்பு திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் (அக்டோபர் 01) தமிழக அரசு சார்பில் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் பிறந்தநாள் விழா நடைபெற உள்ளன. இந்த மகத்தான நாளில் மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத நடிகர் திலகத்தின் புகழை போற்றுவோம்..!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.