உண்மையை மறைத்த அன்பு.. அன்புவிற்காக துடிக்கும் ஆனந்தி.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
Oct 25, 2024, 07:22 AM IST
அன்பு ரூமில் இருக்கும் செல்போன் யாருடையது எனக் கேட்டு அன்புவின் அம்மா சண்டை போட்டுவரும் நிலையில், அன்புவைக் காப்பாற்ற ஆனந்தி உண்மையை சொல்ல முயல்கிறார்.
ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்புவின் வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அன்புவின் அம்மாவும் தங்கையும் வெளியூரில் இருந்து திரும்பி வந்ததால், வீட்டில் ஆனந்தி இருப்பதை கூற முடியாமல், ஆனந்தியையும் வெளியில் அனுப்ப முடியாமல் அன்பு தவித்து வந்தார்.
போனால் சிக்கும் அன்பு
இதற்கிடையில், ஆனந்தியை மகேஷிடம் அன்பு அழைத்துச் சென்ற சமயத்தில், ஆனந்தியின் அம்மா அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அன்புவும் ஆனந்தியும் வீட்டிலேயே போனை வைத்துவிட்டு சென்றதால், அது அடித்துக் கொண்டே இருந்தது. இதனால், போன் சத்தம் கேட்டு அன்புவின் அறைக்கு வந்த அவரது அம்மா திகைத்து போனார். இது அன்புவின் போன் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், இது யாருடைய போன், எதற்காக அன்பு ரூமில் இருக்கிறது என சந்தேகதத்தில் இருக்கிறார்.
தவிக்கும் அன்பு
இதனால், அன்பு வீட்டிற்கு வந்த உடனே அதைப் பற்றி விசாரிக்கிறார். அன்பு அந்த போன் குறித்து சரியான பதிலைக் கூறாததால் அவர் யாருடைய போனையோ திருடி வைத்துள்ளார் என சந்தேகமடைகிறார். இதன் காரணமாக அன்புவிடம் அடுக்கடுக்கான கேள்விகளையும் முன் வைக்கிறார். அத்துடன், அன்புவின் தங்கையிடமும் போன் குறித்து விசாரித்து அன்புவின் நடவடிக்கை பற்றி குறை சொல்கிறார்.
ஆனந்தி எடுக்கப்போகும் முடிவு
இதையெல்லாம் அன்புவின் ரூமிற்குள் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் ஆனந்திக்கு, அன்பு தன்னால் தான் இத்தனை திட்டுகளையும் வாங்குகிறார் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. எப்படியாவது, அன்புவை இந்த விஷயத்திலிருந்து காப்பாற்ற நினைக்கும் ஆனந்தி, அன்புவின் அம்மாவிடம் உண்மையை சொல்ல முற்படுகிறார். மேலும், அந்தப் போன் என்னுடையது தான் எனக் கூறுகிறார்.
ஆனந்தியால் அதிர்ச்சி அடையும் அம்மா
தீடிரென அன்புவின் அறையில் இருந்து பெண் குரல் வருவதால், அன்புவின் அம்மாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனந்தி வெளியே வந்தால் அம்மாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் அன்புவிடம் எழுந்தது. இனி என்ன நடக்கப் போகிறது. அன்பு என்ன சொல்லி சமாளிக்கப் போகிறார். ஆனந்தி வீட்டில் திருட்டுத் தனமாக தங்கி இருந்ததற்கு அவரது அன்புவின் அம்மா என்ன சொல்லப் போகிறார். இனி ஆனந்தியின் நிலை அறிந்து அவரை தொடர்ந்து வீட்டிலேயே தங்க வைக்க சம்மதிப்பாரா என்பதை இனிவரும் நாட்களில் தெரிய வரும்.
அன்புவிடம் கேள்வி எழுப்பும் மகேஷ்
இது இப்படி இருக்க, அன்பு கார்மெண்ட்ஸை விட்டு வெளியேற என்ன காரணம் என்பதை மகேஷ் கண்டுபிடிக்கிறார். இதனால் ஆத்திரம் தாங்காமல் தன்னுடைய ஊழியர்களைத் திட்டுகிரார். அன்பு பல விஷயங்களில் தனக்கு உதவுவார் என எண்ணி, அன்பு தன்னை விட்டு போக அனுமதிக்கக் கூடாது என நினைத்த மகேஷ், தன்னிடம் எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை மறைக்க முடிந்தது எனக் கேள்வி எழுப்புகிறார். இதனால் மகேஷ் எதைக் கேட்கிறார் எனத் தெரியாமல் அன்பு விழி பிதுங்குகிறார்.
இதுகுறித்த ப்ரோமைவை சன் டிவி வெளியிட்டுள்ளது. மேலும், சிங்கப் பெண்ணே சீரியலில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள தினமும் இரவு 9 மணிக்கு சன் டிவியை பாருங்கள்.
டாபிக்ஸ்