கண்ணீர் மல்கி நின்ற சமந்தா.. ஆனால் இது சந்தோஷ கண்ணீர் தானாம்.. என்னவாக இருக்கும்?
Dec 14, 2024, 07:04 PM IST
நடிகை சமந்தா, அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீடு திரும்பியதும் அவரை குடும்பத்தினர் கொண்டாடியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வந்ததாகக் கூறியுள்ளார்.
திரையரங்கில் ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் ஜாமீன் பெற்று ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.
கட்டிப்பிடித்து கலங்கிய குடும்பம்
அப்போது, அவரது சகோதரர் அல்லு சிரிஷ் முதலில் அவரை கட்டிப்பிடிக்க அவரை நோக்கி ஓடி வருகிறார். அதைத் தொடர்ந்து அவரது மகன் அயானும் வந்தார். இதையடுத்து அல்லு அர்ஜூனின் மனைவி சினேகா ரெட்டி அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வைரலான வீடியோ
இந்த வீடியோ வெளியானதை அடுத்து, அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், இணையம் முழுக்க அல்லு அர்ஜூனின் வீடியோவை வைரலாக்கினர். இதையடுத்து, அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வெளிவந்த வீடியோவை சினிமா பிரபலங்கள் சிலரும் பகிர்ந்து தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
கண்கலங்கிய சமந்தா
அந்த வகையில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் கோலோச்சி வரும் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீட்டிற்கு திரும்பும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அப்போது, அவரது மனைவி கட்டிப்பிடித்து வரவேற்பதைக் கண்டு, ஆனந்தக் கண்ணீர் சிந்தியுள்ளார். இதையடுத்து, நான் அழவில்லை எனக் கூறி அல்லு அர்ஜூனையும் அவரது மனைவி சினேகாவையும் குறிப்பிட்டுள்ளார்.
காத்திருந்த விக்கி
இயக்குநர் மற்றும் நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவனும் அல்லு அர்ஜூனின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நீங்கள் விடுதலையாகி வருவதைக் காணத்தான் ஆவலாக காத்திருந்தேன். உங்களது குடும்பத்திற்கு என் வருத்ததை தெரிவித்து கொள்கிறேன். இதனை கடந்து செல்வது எளிதல்ல. ஆனால், இதனை நீங்கள் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியாகவும் கண்ணியமாகவும் இருந்தது எனக் கூறியுள்ளார்.
ஊக்கம் தந்த குஷ்பு
நடிகை குஷ்பு சுந்தரும் அவரது எக்ஸ் தள பக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "ஈகோக்கள், பாதுகாப்பின்மை, அதிகார விளையாட்டுகள் தங்கள் சொந்த குறைபாடுகளையும் தோல்விகளையும் மறைக்க உங்களுக்கு எதிராக விளையாடியுள்ளன. எங்கள் அன்பு பன்னி, இவற்றைக் கடந்தும் வாழ்க்கை உள்ளது. உனக்கு அதிக சக்தி உள்ளது. உன்னை எதுவும் தடுக்க முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு குரல் கொடுத்த பிரபலங்கள்
முன்னதாக, வருண் தவான், நானி, நிதின், ராம் கோபால் வர்மா, விவேக் ஓபராய், ராஷ்மிகா மந்தனா, ஷர்வானந்த், சந்தீப் கிஷன், அதிவி சேஷ், ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
மேலும், அல்லு அர்ஜூன் வீடு திரும்பியதும் ராணா டகுபதி, நாக சைதன்யா, நிம்மா உபேந்திரா, விஜய் தேவரகொண்டா, ஆனந்த் தேவரகொண்டா போன்ற பிரபலங்கள் அவரை சந்தித்து ஆறுதல் அளித்தனர்.
சந்தியா தியேட்டரில் பெண் மரணம்
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் தனது புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் காட்சிகளைக் காணவந்த ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக சந்தியா தியேட்டருக்கு விசிட் வந்தார். அப்போது அவரைக் காண அவரது ரசிகர்கள் முந்தி அடித்துக் கொண்டு சென்றதால் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்குள் வந்து நெரிசல் ஏற்பட்டு நிலமை கை மீறி சென்றது.
இது ஒரு பெண்ணின் மரணத்திற்கும் அவரது மகனை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பதற்கும் வழிவகுத்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இதையடுத்து நம்பள்ளி நீதிமன்றம் அர்ஜுனை 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய பின்னர் தெலுங்கானா உயர் நீதிமன்றம் 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.