முடிவுக்கு வராத பஞ்சாயத்து..அடிமடியில் கை வைத்த ரிலையன்ஸ்! கங்குவாவுக்கு தடை - என்ன நடந்தது?
Nov 07, 2024, 05:36 PM IST
வாங்கிய கடன் தொகையில் பாதிக்கு மேல் செலுத்தாத ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அடிமடியில் கை வைத்த ரிலையன்ஸ், கங்குவாவுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. பணம் பாக்கி விஷயத்தில் இரு நிறுவனங்களுக்கும் இடையே முடிவுக்கு வராத பஞ்சாயத்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி அடுத்த வாரம் ரிலீஸுக்கு தயாராக இருந்து வரும் கங்குவா படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கங்குவாவுக்கு தடை
ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பல்வேறு படங்களை தயாரிக்க எங்கள் நிறுவனத்திடம் ரூ. 99 கோடி 22 லட்சம் கடன் வாங்கியது. இதில் ரூ. 55 திரும்ப செலுத்தாத நிலையில், அந்த நிறுவனம் தயாரித்துள்ள கங்குவா படத்தை வெளியட தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தது.
ஸ்டுடியோ க்ரீன் உறுதி
இந்த வழக்கின் விசாரணையின்போது, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால் வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முடியாத பஞ்சாயத்து
ஏற்கனவே, கடந்த 31ஆம் தேதி ரிலையன்ஸ் சார்பில் சென்னைன உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டெடி 2, எக்ஸ் மீட் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடி 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.
இதில், ரூ.45 கோடி அவர் திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.55 கோடியை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீத தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அதேபோல் அவரது நிறுவன தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், நவம்பர் 7ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது. அதேபோல் தங்கலான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது மீண்டும் கங்குவா ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பணப்பிரச்னை முடிவுக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், தற்போது முடியாத பஞ்சாயத்தாக நீண்டுள்ளது. கங்குவா ரிலீஸுக்கு இன்னும் ஒரு வார காலமே இருக்கும் நிலையில், கடனை தீர்த்து கங்குவா படத்தை எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் செய்யும் முயற்சியில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கங்குவா படம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த பேண்டஸி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் கங்குவா படத்தில் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் சன்னி தியோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகும் படமாக கங்குவா இருப்பதால் படம் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.