நிலுவை கடன் தொகை..கங்குவா மற்றும் தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு சிக்கல்? உத்தரவாதம் அளித்த ஸ்டுடியோ க்ரீன்! பின்னணி என்ன
நிலுவை கடன் தொகையை செலுத்திய பிறகு கங்குவா ரிலீஸ், தங்கலான் ஓடிடி ரிலீஸ் செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு படங்கள்் ரிலீஸுக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக ஸ்டுடியோ க்ரீன் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் கங்குவா படத்தின் ரிலீஸுக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கங்குவா ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "டெடி 2, எக்ஸ் மீட் ஓய், தங்கலான் பட தயாரிப்பு பணிக்காக என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் உரிமையாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 99 கோடி 22 லட்சத்து 49 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.
இதில், ரூ.45 கோடி அவர் திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.55 கோடி யை வழங்காமல் ஒப்பந்த விதிகளை மீறி செயல்பட்டுள்ளார். எனவே அவர் மீத தொகையை திருப்பித் தராமல் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
அதேபோல் அவரது நிறுவன தயாரிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது."
நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்த போது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில், "நவம்பர் 7ஆம் தேதி வரை கங்குவா திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது. அதேபோல் தங்கலான் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட மாட்டாது என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கங்குவா படம்
சூர்யா நடிப்பில் பேண்டஸி ஆக்ஷன் த்ரில்லர் படமாக மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கங்குவா படத்தில் பாலிவுட் இளம் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படத்தின் இசை வெளியீடு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி தவிர உலகம் முழுவதும் 38 மொழிகளில் படம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது படத்தின் ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக கடந்த 2022 எட்டுத்திக்கும் துணிந்தவன் படம் வெளியானது. இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யாவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் இந்த நேரத்தில் படத்தின் ரிலீஸ் தொடர்பாக சிக்கல் எழுந்துள்ளது.
தள்ளிப்போகும் தங்கலான் ஓடிடி ரிலீஸ்்
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இந்த படத்தையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. அத்துடன் பல்வேறு காரணங்களால் தங்கலான் ஓடிடி ரிலீஸ் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், தீபாவளிக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வழக்கின் காரணமாக தங்கலான் ஓடிடி மேலும் தள்ளிப்போகிறது.
