RIP Ravi Shankar: வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநரும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவருமான ரவி சங்கர் மறைவு!
Jul 14, 2024, 10:11 AM IST
RIP Ravi Shankar: வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநரும் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ பாடலை எழுதியவருமான ரவி சங்கர் காலமானார்.
RIP Ravi Shankar: ‘’வருஷமெல்லாம் வசந்தம்'' திரைப்படத்தின் இயக்குநரும் பாடல் ஆசிரியருமான ரவி சங்கர் காலமானார்.
சிறுகதை மூலம் பாக்யராஜை ஈர்த்தவர்:
’பாக்யா’ என்ற இதழில் ‘குதிரை’ என்ற ஒரு சிறுகதை எழுதி, இயக்குநர் பாக்யராஜின் கவனத்தை ஈர்த்தவர். பின், இது நம்ம ஆளு போன்ற பாக்யராஜின் படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவிட்டு, இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநராக வெகுகாலம் பணிசெய்தவர். இவரது எழுத்துத் திறமையைப் பார்த்த இயக்குநர் விக்ரமன், சூர்ய வம்சம் திரைப்படத்தில் இரண்டு பாடல்களை எழுத வாய்ப்பளித்தார். அப்படி உருவானதுதான், 'ரோசப்பூ சின்ன ரோசாப்பூ உன்பேரை சொல்லும் ரோசாப்பூ'; 'சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு’ஆகியப் பாடல்களை எழுதி,அதனை மிகப்பெரியளவில் ஹிட்டடிக்கவைத்தார்.
அதன்பின், முதன்முதலாக மனோஜ் பாரதி, குணால், அனிதா ஹசநந்தனி ஆகியோரை வைத்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்னும் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திலும் நான்கு பாடல்களை எழுதினார், ரவி சங்கர். குறிப்பாக, ’அடியே அனார்கலி, எங்கே அந்த வெண்ணிலா, முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்.. ஒன்று கேட்கிறேன் என்னைத் தெரிகிறதா’ ஆகியப் பாடல்களை எழுதியுள்ளார். இப்படம் இரண்டு மாநில விருதுகளை வென்றது. குறிப்பாக, இப்படத்தின் பாடல் ஆசிரியர் ரவி சங்கருக்கு ஒரு மாநில விருதும், அப்படத்தின் பாடல்களைப் பாடியவருக்கு உன்னி கிருஷ்ணனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் கிடைத்துள்ளது.
இத்தகைய புகழ்மிக்க இயக்குநர் ரவி சங்கர் சரியான படவாய்ப்புகள் அடுத்து அமையாமல் இருந்ததால், திருமணம் முடிக்காமல் தனிமையில் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் கே.கே.நகரில் உள்ள அவரது அறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் கதை என்ன?
தென்காசியைச் சார்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர், பரமசிவம். இவர்களுக்கு இரண்டு பேரன்கள். மூத்தவர் ராஜா, இளையவர் ரமேஷ். ராஜா, வேலைக்கு எதற்கும் செல்லாமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளையபேரன் ரமேஷ், டெல்லியில் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார்.
பரமசிவத்தின் ஒன்றுவிட்ட அண்ணன் மகள், அவரது கணவர் மற்றும் மகளுடன் கொல்கத்தாவில் இருந்து, பரமசிவத்தின் வீட்டிற்கு விடுமுறைக்கு வருகின்றனர்.
ராஜாவுக்கு லதாவைப் பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. அவளுடன் முதலில் நட்பாக முயற்சிக்கிறார். இதற்கிடையே இளையவர் ரமேஷூம் டெல்லியில் இருந்து ஊருக்கு வருகிறார். ரமேஷூக்கும் லதா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது.
இதை எப்படியோ அறியும், ராஜா, ரமேஷை விட சிறந்தவனாக இருந்தால்தான், தனக்கு லதா கிடைப்பாள் என்பதை உணர்ந்து நண்பர்களின் அறிவுரையை ஏற்று கலெக்டர் வேலையில் சேர முயற்சிக்கிறார். பின், கல்வியறிவு இல்லாததால் அவரது முயற்சி வீண் ஆகிறது. பின், ஆங்கிலம் கற்க முயல்கிறார். அதிலும் சொதப்பிடுவிகிறார்.
லதாவின் மீதான ராஜாவின் ஒரு தலைக் காதலை உணர்ந்துகொண்ட, தம்பி ரமேஷ், அதைக் கெடுக்க முயற்சி செய்கிறார். லதாவுக்கு ஒவ்வாமை உள்ள சப்போட்டோ, அவளுக்கு மிகப்பிடிக்கும் என ராஜாவிடம் சொல்கிறார், ரமேஷ். இதனை அறிந்த ராஜா, சப்போட்டோ பழக்கூடையை லதாவுக்குப் பரிசளிக்கிறார். இதனால் லதாவுக்கும் ராஜாவைக் கண்டால் எரிச்சல் ஆகிறது.
அதன்பின், ஒரு நாள் சமாதானம் ஆகின்றனர், லதாவும் ராஜாவும். அப்போது பல பரிசுகளை விட, ஒருவர் கடினமாக உழைத்து கிடைக்கும் பூ சிறந்தது என்கின்றார், லதா.
இதைப்புரிந்துகொண்ட ராஜா, ஒரு உலோகத் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்து கஷ்டப்படுகிறார். ராஜாவின் மன மாற்றத்தைக் கொண்டு, அவனை எப்போதுமே திட்டிக்கொண்டு இருக்கும் அவரது பரமசிவம் தாத்தா சாந்தம் ஆகின்றார்.
ராஜாவின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருப்பவர், லதா என்பதை அறிந்துகொள்ளும் தாத்தா பரமசிவம், இருவருக்கும் இடையில் திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிடுகிறார்.
இதைக்கேட்ட லதா அதிர்ச்சியாகிறார். ஆனால், ஒருதலையாக லதாவை காதலித்தாலும் தான் வேறு ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், தன்னால் மீளமுடியவில்லை என்றும், கூறி அத்திருமண அறிவிப்பை மறுக்கிறார், ராஜா. பின், ராஜாவின் தம்பி ரமேஷூக்கும் லதாவுக்கும் திருமணம் என்னும் அறிவிப்பினை வெளியிடுகிறார், தாத்தா பரமசிவம். இதற்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
பின் ராஜாவை சந்திக்கும் ரமேஷ், ஏன் திருமணத்துக்குச் சம்மதிக்கவில்லை எனக் கேட்கிறார். அப்போது, லதா உன்னைக் காதலிக்கிறாள் என முன்பே தன்னிடம் வந்து சொன்னதாகக் கூறுகிறார், ராஜா. மேலும், காதல் இரண்டு தரப்பில் இருந்தும் வரவேண்டும் எனக் கூறுகிறார். இதனால் தன்னுடைய முந்தையகால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறார், ரமேஷ். பின் இருவரும் பகைமை மறந்து ஒன்றாகின்றனர். இதைக் கேட்டு ஆசுவாசம் ஆகிறார், தாத்தா பரமசிவம். அதன்பின், பரமசிவம் ராஜாவின் மேல் பரிவுடன் நடந்துகொள்கிறார்.
தான் காதலித்த பெண் கிடைக்காதபோதிலும், தன்னை திட்டிக்கொண்டே இருந்த தாத்தாவின் அன்பு கிடைப்பதை நினைத்து மகிழ்கிறார், ராஜா.
இப்படத்தில் ராஜாவாக மனோஜ் பாரதியும், ரமேஷாக குணாலும், தாத்தா பரமசிவமாக எம்.என்.நம்பியாரும் நடித்துள்ளனர். லதாவாக அறிமுக நடிகை அனிதா ஹாசநந்தனி நடித்திருந்தார். படத்திற்கு இசை மற்றும் பாடல்கள் பெரிய பிளஸ். அதைச் சிறப்பாக செய்திருந்தார், இசையமைப்பாளர் சிற்பி.
டாபிக்ஸ்