புஷ்பா 2 தி ரூல் அட்வான்ஸ் புக்கிங்.. இந்தியாவில் மட்டும் 8 லட்சம் டிக்கெட்டுகள்; படம் ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு வசூலா?!
Dec 02, 2024, 08:14 PM IST
புஷ்பா 2 தி ரூல் அட்வான்ஸ் புக்கிங்.. இந்தியாவில் மட்டும் 8 லட்சம் டிக்கெட்டுகள்; படம் ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு வசூலா?! என்பது குறித்துப் பார்ப்போம்.
இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்துள்ள திரைப்படம், புஷ்பா 2: தி ரூல். இப்படமானது வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
2021ஆம் ஆண்டு வெற்றி அடைந்த ‘’புஷ்பா: தி ரைஸ்'' திரைப்படத்தின் தொடர்ச்சியான இந்தப் படம் உலகளவில் ரிலீஸுக்கு முன்பே, ரூ.42.50 கோடி வசூலை ப்ரீ புக்கிங் மூலம் பெற்றுள்ளது.
புஷ்பா 2: தி ரூல் அட்வான்ஸ் புக்கிங்:
Sacnilk.com இணையதளத்தின் ஆய்வின்படி, புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் இந்தியாவில் இதுவரை டிக்கெட் முன் விற்பனையில் ரூ.25.57 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக, இப்படம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிகளுக்காக, 8 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புஷ்பா 2 தி ரூல் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி பதிப்புகளில் வெளியாகிறது. மேலும், 2டி, 3டி, 4டி எக்ஸ் மற்றும் ஐமேக்ஸ் ஆகிய வெர்ஷன்களிலும் இதன் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன.
அமெரிக்காவிலும் ப்ரீ புக்கிங்கில் சாதனைப் படைத்த புஷ்பா 2:
புஷ்பா 2 தி ரூல் திரைப்படத்தின் அமெரிக்க விநியோகஸ்தரான பிரத்யங்கிரா சினிமாஸின் கூற்றுப்படி, இந்த படம் முன் விற்பனையில் 2 மில்லியன் டாலர் (ரூ .16.93 கோடி) வசூலித்துள்ளது. ஆக, இந்தியா மற்றும் அமெரிக்காவில் மொத்தம் ரூ .42.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அமெரிக்காவில் 1010 க்கும் மேற்பட்ட இடங்களில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புஷ்பா 2 தி ரூல் படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
புஷ்பா: தி ரைஸ் இந்தி வெர்ஷன் ஆனது ஃப்ரீ புக்கிங் தொடங்கி முதல் 12 மணி நேரத்தில் 1.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றன. புஷ்பா 2: தி ரூல் டிசம்பர் 1 மதியம் வரை இந்தியில் 1.8 லட்சம் டிக்கெட்டுகளை விற்று கணிசமான வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. இப்படம் இதுவரை தெலுங்கில் ரூ.12 கோடியும், இந்தியில் ரூ.8 கோடியும் வசூலித்தது.
கே.ஜி.எஃப்: சாப்டர் 2 திரைப்படமானது ரிலீஸுக்கு முந்தைய ப்ரீ சேல்ஸில் ரூ.80 கோடியும், பாகுபலி 2: தி கன்க்ளூஷன் ரூ.90 கோடியும், புஷ்பா 2: தி ரூல் ரூ.42.50 கோடி வரையும் வசூலித்துள்ளன.
புஷ்பா 2 பற்றி: தி ரூல்:
சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம், ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றியது.
சுகுமாரின் புஷ்பா 2: தி ரூல் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்ப ராஜின் வாழ்க்கையைத் தொடர்ந்து பேசப்போகிறது. இந்தப் பாகத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவள்ளியுடனான புஷ்பராஜின் திருமணம் மற்றும் பன்வர் சிங் ஷெகாவத்(ஃபஹத்) உடனான அவரது விரோதம் ஆகியவற்றை அதிகம் ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் படத்தின் நான்காவது பாடலான பீலிங்ஸை டிசம்பர் ஒன்றாம் தேதியான நேற்று வெளியிட்டனர். இந்த புஷ்பா 2 திரைப்படம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிட்டடித்த புஷ்பா 2 பாடல்கள்:
’புஷ்பா புஷ்பா புஷ்பராஜ்’ என்னும் முதல் சிங்கிள் பாடலும் வெளியானது. அப்பாடலை தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். அடுத்து ’’சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. பார்க்கத்தான் பாறை.. உள்ளேயே வேற..’’என அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். இப்பாடல்கள் இரண்டும் சமூகவலைதளங்களில் ஹிட்டாகின.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலாவுடன், ’சப்புன்னு அறைவேன்டா.. கிஸ் கிஸ் கிஸ்கிஸுக்’ என்னும் பாடலில் அல்லு அர்ஜூன் ஆடிய பாடல் வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் டிசம்பர் ஒன்றாம் தேதி மாலையில், வந்துச்சே பீலிங்ஸ்.. வந்துச்சே பீலிங்ஸ்.. வண்டிய வண்டியா வந்துச்சு பீலிங்ஸ் என்னும் பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் பாடலையும் தேவிஸ்ரீபிரசாத்தின் ஆஸ்தான கவிஞரான விவேகா எழுதியிருக்கிறார். இப்பாடலும் ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜூனின் நடன அசைவுகளால் வெகு சீக்கிரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
டாபிக்ஸ்