புஷ்பா 2: தி ரூல் ஆட்டம் ஓவர்.. சரிவை சந்திக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்! ஆனாலும் புதியதொரு மைல்கல் சாதனை
Dec 20, 2024, 07:48 AM IST
இந்தியாவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருக்கும் புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை காண தொடங்கியுள்ளது. பாகுபலி சீரிஸ் படங்களுக்கு பிறகு இந்தியாவில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் படமாக புஷ்பா 2 மாறவுள்ளது.
இந்த மாதம் தொடக்கத்தில் வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூல் செய்து வருகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 15வது நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இந்த படம் 15 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 988.72 கோடி வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை தெரிவிக்கும் Sacnilk.com இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, படம் 15வது நாளில் ரூ. 15.97 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது. இதனால் படத்தின் மொத்த இந்திய வசூல் ரூ. 988.92 கோடி ஆகியிருக்கும் நிலையில், இன்று ஆயிரம் கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் புதியதொரு மைல்கல்லை எட்டும். படம் தற்போது வரை உலக அளவில் ரூ. 1,508 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக படம் முதல் வாரத்தில் ரூ. 725.8 கோடி வசூலித்திருந்தது. இதையடுத்து இரண்டாவது வாரம் படத்தின் வசூல் 73 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது. படம் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரூ. 36.4 கோடி வசூலித்த நிலையில், சனிக்கிழமை ரூ. 63.3 கோடியும், ஞாயிற்றுகிழமை ரூ. 76.6 கோடியும் வசூலித்துள்ளது. இதன் பின்னர் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் முறையே ரூ. 26.95, ரூ. 23.35, ரூ. 20.55 கோடி வசூலித்துள்ளது.
அல்லு அர்ஜுன் கைது
புஷ்பா 2 ரிலீஸ் நாளுக்கு முந்தைய நாள் ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் வரவிருந்த தகவல் பரவிய நிலையில், அவரை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக, ரேவதி இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் திரையரங்கு ஊழியர்கள் சிலரை கைது செய்தனர். அத்துடன் இந்த துயர சம்பவம் நடக்க அல்லு அர்ஜுன்தான் காரணம் எனக்கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதில் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், மேல் முறையீட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது அல்லு அர்ஜுன் கைது சம்பவம்.
ராம்கோபால் வர்மா சர்ச்சை கருத்து
அல்லு அர்ஜுன் கைதுக்கு பின் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவரது ஆதரவு தெரிவித்தனர். தெலுங்கு சினிமாவின் சர்ச்சை இயக்குநரான ராம்கோபால் வர்மா அல்லு அர்ஜுன் கைது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "அல்லு அர்ஜுன் கைதுக்கு எதிராக அனைத்து ஸ்டார்களும் குரல் எழுப்புகிறார்கள். சினிமா அல்லது அரசியல் பிரபலம் என யாராக இருந்தாலும் அவர்கள் மிக பெரிய அளவில் பிரபலமாக இருப்பது குற்றமாக பார்க்கப்படுகிறது.
க்ஷண க்ஷணம் படப்பிடிப்பின் போது ஸ்ரீதேவியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது, கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இப்போது தெலங்கானா போலீஸ் சொர்க்கத்துக்கு சென்று ஸ்ரீதேவியை கைது செய்வார்களா?" என தனது பாணியில் சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.