பொய் குற்றச்சாட்டு! ஆதாரங்கள் இல்லை..நிவின் பாலி மீதான பாலியல் புகார் வழக்கில் திடீர் திருப்பம் - நடந்தது என்ன?
Nov 06, 2024, 10:40 PM IST
நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, எஃப்ஐஆரில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது பெண் பொய் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் என தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளம் திரையுலகை உலுக்கிய சம்பவமாக ஹேமா கமிட்டி அறிக்கை இருந்தது. இதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள், நடிகைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை, துன்புறுத்தல் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கர் பலர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டது. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு வந்த இந்த புகார் அனைத்தும் கவனம் பெற்றன.
பிரேமம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பான விசாரணையில் நிவின் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தாத நிலையில், அவர் மீது போலியானது என தெரியவந்துள்ளது.
நிவின் பாலிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை
நிவின் பாலி மீதான குற்றச்சாட்டுகளை கொத்தமங்கலம் மாவட்ட நீதிமன்றத்தில் எர்ணாக்குளம் டிஒய்எஸ்பி தாக்கல் செய்தார். அதில், புகார்தாரர் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிவின் பாலி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிவின் பாலிக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆறாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் பெயர் எஃப்ஐஆரிலிருந்து நீக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பாலியல் புகாரில் நிவின் பாலி குற்றமற்றவர் என நிருபணம் ஆகியுள்ளது.
இதன் மூலம் புகார் அளித்த பெண், நிவின் மீது போலியான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
ஆதரவாக இருந்ததற்கு நன்றி
தன் மீதான குற்றச்சாட்டு போலி என தெரிந்த பின்னர் நடிகர் நிவின் பாலி தனது இன்ஸ்டாவில், “என் பக்கம் நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
பொய் குற்றச்சாட்டு
"இது பொய் குற்றச்சாட்டு. சட்டப்படி போராடி, வழக்கில் இருந்து வெளியே வருவேன்" என நிவின் பாலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டபோது தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் சொன்னது போலவே தற்போது இந்த பாலியல் குற்றச்சாட்டு பொய் என நிருபணம் ஆகியிருக்கிறது
நிவின் பாலியின் பயண சீட்டு விவரங்கள், அவரது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தினோம். இவை யாவும் அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை என பாலியல் வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவை சேர்ந்த அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
நிவின் பாலி மீதான பாலியல் புகார்
எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறியிருந்தார்.
இந்த புகார் தொடர்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊனுக்கல் காவல் நிலையத்தில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் விசாரணையும் நடைபெற்றது. இதில் நடிகரும், இயக்குநருமான வினீத் ஸ்ரீனிவாசன், பாலியல் புகார் அளிக்கப்பட்ட தேதியில் நிவின் பாலி தன்னுடன் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படப்பிடிப்பில் இருந்ததாக கூறியது, வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
நிவின் பாலி படங்கள்
2010இல் மலையாளத்தில் வெளியான மல்வாடி ஆர்ட்ஸ் கிளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிவின் பாலி. மலையாளம் மற்றும் தமிழில் வெளியான நேரம் படம் மூலம் தமிழில் நடிகரான இவர், தொடர்ந்து ரிச்சி என்ற மற்றொரு தமிழ் படத்திலும் நடித்தார். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நிவின் பாலி தற்போது ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வர்ஷங்களுக்கு சேஷம், மலையாளி பிரம் இந்தியா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.