புதிய பாலியல் குற்றச்சாட்டு..மீ டூ வழக்கில் சிறையில் இருக்கும் தயாரிப்பாளருக்கு புற்றுநோய் பாதிப்பு
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு நியூயார்க் சிறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் எலும்பு மஜ்ஜை புற்றுநோய் பாதிப்பு அவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹாலிவுட் சினிமாக்களின் தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு ஒரு வகையான எலும்பு மஜ்ஜை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் அவர் மீது புதிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே 72 வயதான ஹார்வி வெயின்ஸடீன், நாள்பட்ட மைலோயிட் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க் சிறையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஹார்வியின் சட்டப்பூர்வ சுகாதாரப் பிரதிநிதி கிரேக் ரோத்ஃபீல்ட், ஹார்வியின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, அவரது உடல்நிலை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
ஹார்வி வெய்ன்டீனுக்கு ஏற்பட்ட உடல் நலப்பிரச்னை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜூலை மாதம், ஹார்வி, கோவிட்19 மற்றும் இரு நுரையீரலிலும் உள்ள நிமோனியா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக நியூயார்க் நகர சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.