தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sasikumar: முகத்தில் மிதித்து... முதுகை கிழித்து... கழிவறையில் தள்ளி... கொடுமைக்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Sasikumar: முகத்தில் மிதித்து... முதுகை கிழித்து... கழிவறையில் தள்ளி... கொடுமைக்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர்

Sep 28, 2024, 02:27 PM IST

google News
Sasikumar: நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், சசிகுமாரிடம் ஒரு நீண்ட நெடிய மன்னிப்பைக் கோரியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
Sasikumar: நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், சசிகுமாரிடம் ஒரு நீண்ட நெடிய மன்னிப்பைக் கோரியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Sasikumar: நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், சசிகுமாரிடம் ஒரு நீண்ட நெடிய மன்னிப்பைக் கோரியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை. அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை. இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நந்தன் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சசிக்குமாரிடம் மன்னிப்பு கோரி நீண்ட நெடிய பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் உள்ள காட்சிகள் உண்மையாகவும், தத்ரூபமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சசிகுமாரை பல கொடுமைகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், இயக்குநரின் இந்தப் பதிவு பதைபதைக்க வைக்கிறது.

அந்தப் பதிவில், நந்தன் படத்தில் தன்னுடைய கேரக்டரை நிரூபிப்பதற்காக நடிகர் சசிகுமார் பட்ட அத்தனை கஷ்டங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். இந்தப் பதிவில் இயக்குநர் சரவணன் கூறியதாவது,

கட்டாந்தரையை பழக்கிக் கொண்ட சசிகுமார்

"வேறு யாராக இருந்தாலும், ‘போடா அங்கிட்டு’ எனச் சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால், சசிகுமார் சார் என் அத்தனை கெடுபிடிகளையும் சகித்து நின்றார். ‘நந்தன்’ படத்துக்காக கெட்டப் தொடங்கி குணாதிசயம் வரை மாறினார். பற்கள் கறை பிடிக்க வெற்றிலைக்குப் பழக்கமானார். “கேரவன் ஏறவேகூடாது” என்பேன். ஷாட் முடிந்தும் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து இருப்பார்.

வம்படியாக முகத்தில் மிதக்க வைத்தேன்

முகத்தில் மிதிக்கிற காட்சி… முடியவே முடியாது என்றார்கள் சசி சாருடன் வந்தவர்கள். பாலாஜி சக்திவேல் சார் கையெடுத்துக் கும்பிட்டார். “என்னால முடியாது சரவணன்… என்னைய விட்ருங்க ப்ளீஸ்” என்றார். “ஊர்க்காரங்க மாதிரி வெறிகொண்டு மிதிச்சா ஒரே ஷாட்ல ஓகே ஆகிடும். நீங்க தயங்கினா ஷாட் போயிட்டே இருக்கும்” என்றேன்.

என்னருகே நின்றபடி அதைக் கேட்டுக் கொண்டிருப்பார் சசி சார். சண்டைப் பயிற்சியாளர் ஜான் மார்க் டம்மி கட்டைகளை எடுத்துவர, அவற்றைத் தூரப் போட்டுவிட்டு பழுப்பேறிய தென்னை மட்டைகளைக் கொடுத்தேன். அந்த ஸ்பாட்டை விட்டே சண்டை பயிற்சியாளர் போய் விட்டார்.

தரதரன்னு இழுத்து பாத்ரூம்ல தள்ளினேன்

ஊர்க்காரர்கள் முன்னால் கத்தினேன். “யாரும் சசி சார்னு இரக்கப்படுறதோ லேசுபாசா நடந்துக்கிறதோ கூடாது. ஊர்ச்சண்டை நடந்தா எப்படி அடிப்பீங்களோ அப்படி அடிக்கனும்; தென்னை மட்டை அவர் முதுகுல போர்ஸா விழனும். தரதரன்னு சசி சாரை இழுத்துட்டுப் போகனும். உதைச்சு பாத்ரூம்ல தள்ளனும்” என காட்சிகளை விளக்கினேன்.

ஊர்க்காரர்களே ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். “எல்லாம் சரி சார்… ஆனா அந்த பாத்ரூம் உள்ளே தள்ள வேணாம்… அது பதினஞ்சு குடும்பங்க பொழங்குற கக்கூசு…” என்றார்கள். “பரவாயில்ல… அதுலயே என்னைய புடுச்சு தள்ளுங்க… என்னைய பத்திரமா பார்த்துக்குறேன்னு பத்து டேக் எடுக்க வைச்சிராதீங்க” என்றார் சசி சார்.

நான் அவரிடம் பேசுவதையே விட்டுவிட்டேன்

க்ளைமாக்ஸ் காட்சிகள் படமான போது சசிகுமார் சாரிடம் பேசுவதையே நான் தவிர்த்தேன். என் உதவியாளர்கள் மூலமாகவே சேதி சொல்வேன். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை எடுத்து முடிக்கும் வரை நான் மிருகம். வேடிக்கை பார்த்தவர்கள்கூட என்னைத் திட்டித் தீர்த்தார்கள். சசிகுமார் சார் எதுவுமே சொல்லவில்லை. மூங்கில் கம்பு தோள் பட்டையைக் கிழித்து கொட்டியது ரத்தம். தென்னை மட்டை நடு முதுகில் விழுந்ததில் முதுகு முழுக்கக் காயமாகி, சசி சாருக்கு ஜுரம் வந்தது.

காய்ச்சலில் இருந்தவரை ரீ ஷூட்டிற்கு அழைத்தேன்

ஐந்து நாட்களுக்குப் பிறகு சசிகுமார் சாரை போய்ப் பார்த்தேன். “எடுத்த வரைக்கும் திருப்தியா வந்திருக்கா?” என்றார். “தரையில் இழுபடுகிற ஷாட் ரீ ஷூட் பண்ணனும்… பாலாஜி சார் மிதிக்கிற காட்சி செயற்கையா இருக்கு. அவர்கிட்ட நீங்களே பேசுனீங்கன்னா மிதி ஒழுங்கா வர வாய்ப்பிருக்கு” என்றேன். அடுத்த நாள் அந்தக் காட்சிகள் படமாகின.

கொடூரனாக மாறினேன்

படத்தில் வருகிற வன்முறைக் காட்சிகளைக்கூட நான் விரும்புகிறவன் இல்லை. பிறகு ஏன் இவ்வளவு கொடூரம் எனக் கேட்கலாம். பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பலருடைய துயரக் கதைகள் இதை மிஞ்சுபவை; இன்றளவும் நடப்பவை. ‘காவல் துறை என்று ஒன்று இருக்கிறதா’ எனக் கேட்கிற அளவுக்கு ரிசர்வ் பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடத்தப்படுகிற கொடுமைகள் எக்கச்சக்கம்.

இந்த நிஜங்களின் பதிவாக உருவாகும் ‘நந்தன்’ படத்தில் சசிகுமார் சாருக்காக எதையும் குறைக்க நான் விரும்பவில்லை. ஓர் இயக்குநராக நான் எதை வேண்டுமானாலும் விரும்பலாம்; நிறைவேற்றலாம். ஆனால், கதாநாயகனாக சசிகுமார் இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டு நின்றிருக்கத் தேவையில்லை. படத்தையே நிறுத்திவிட்டுக் கிளம்பி இருக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் அவர் ஏற்று நின்றார்.

சீமானின் வாழ்த்து

‘நந்தன்’ நினைத்ததை நிகழ்த்தியிருக்கும் சூழலில், சசிகுமார் சாரை சந்தித்தேன். அவர் நடிப்பு குறித்து பலரும் பாராட்டிய வார்த்தைகளைச் சிலிர்ப்போடு சொன்னார். “உன்னை நம்பி இனி எந்தக் கதாபாத்திரத்தையும் கொடுக்கலாம். அப்பேர்ப்பட்ட நடிப்புடா இந்தப் படத்துல…” என அண்ணன் சீமான் பாராட்டியதைச் சொன்னார்.

கைகளைப் பற்றிய சசிகுமார்

“என் படம் வரும் போதெல்லாம் நல்லா பண்ணியிருக்கேன்னு பல பேர் சொல்வாங்க. ஆனா, ‘நந்தன்’ பார்த்திட்டு நல்லா நடிச்சிருக்கேன்னு சொல்றாங்க. ஒரு நடிகனுக்கு இதுதாங்க தேவைப்படுது” என என் கைகளைப் பற்றிக் கொண்டார் சசிகுமார் சார். அமைதியாக நின்றேன். நான் என்ன சொல்லப் போகிறேன் என்கிற வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.

“என்னை மன்னிச்சிடுங்க சார்…” என தனது செய்கையையும் அதற்கான காரணத்தையும் விளக்கிக் கூறி மன்னிப்பு கோரியுள்ளார் இயக்குநர் சரவணன்.

 

நந்தன் எதை மக்களிடம் பிரதிபலிக்கிறது

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன். நடிகர் சசிகுமார்- இயக்குநர் இரா.சரவணன் கூட்டணியில் வெளியான இத்திரைப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நடிகர் பாலாஜி சக்திவேல் ஆதிக்க வர்க்க அதிகாரம் மூலம் எப்படி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திடீரென்று, அந்தத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கினால் என்ன நடக்கும் என்ற கதையை இயக்குநர் சுவாரசியம் நிறைந்த கதைக்களமாக அமைத்துள்ளார்.

இந்த படத்தில் அம்பேத்ராஜாக வரும் சசிகுமார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவராக நடித்துள்ளார். மேலும், இவர் படத்தில் ஆதிக்க வர்க்கத்திற்கு பதிலடி அளித்தாரா? அவரது மக்களின் உரிமைகளை மீட்டாரா என்பதே மீதிக்கதை. முன்னதாக இந்தப் படத்தைப் பார்த்த பல பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் நடிகர் சசிகுமார் பட்ட அத்தனை வலிகளையும் தாங்கள் அனுபவித்து உள்ளதாகக் கூறி படம் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை மிக ஆழமாக பதிவு செய்திருந்தனர்

 

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி