Nagarjuna: குரூரமான பேச்சு..அமைச்சர் கொண்டா சுரேகா எதிராக புகார்!அதிரடி காட்டிய நாகார்ஜூனா
Oct 03, 2024, 07:54 PM IST
Nagarjuna Files Complaint: தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக நடிகர் நாகார்ஜூனா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் நகலை நடிகர் நாகசைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீது தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா போலீசில் புகார் அளித்துள்ளார். தனது மகன் நாகசைதன்யா மற்றும் அவரது முன்னாள் மனைவி சமந்தா ஆகியோரின் உறவு குறித்து குரூரமான கருத்தை பொதுவெளியில் தெரிவித்திருப்பதாக தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நாகசைதன்யா எக்ஸ் பதிவு
காங்கிரஸ் அமைச்சர் கூறிய கருத்துக்கு அவருக்கு எதிராக தனது தந்தை அளித்திருக்கும் புகாரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நாக சைதன்யா. இதில் எந்த கேப்ஷனும் அவர் குறிப்பிடவில்லை. இந்த புகார் கடிதம் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவதூறு நோட்டீஸ்
பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமராவ், கொண்டா சுரேகாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்டப்பூர்வ நோட்டீஸில், சுரேகா தனது இமேஜுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும், அமைச்சர் தனது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேடிஆர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து காரணமாக இருந்தது முன்னாள் அமைச்சரும், பாரதிய ராஷ்ட்ரா சமீதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமா ராவ் தான் என்று தெலுங்கானா மாநில வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்து வரும் கொண்டா சுரேகா பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், "நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து சென்றதற்கு காரணமே முன்னாள் அமைச்சர் கேடிஆர் தான். அந்த அமைச்சரால் சமந்தா மட்டுமல்ல, பல நடிகைகளும் சினிமா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலகியுள்ளனர்.
அப்போது அமைச்சராக இருந்த அவர் நடிகைகளின் போன்களை டேப் செய்து அவர்களின் பலவீனங்களை கண்டுபிடித்து பிளாக்மெயில் செய்வார்.
நடிகைகளை போதைக்கு அடிமையாக்கி பிறகு இப்படி செய்தார். இது எல்லோருக்கும் தெரியும் சமந்தா, நாக சைதன்யா, அவரது குடும்பத்தினரும், இப்படி ஒரு சம்பவம் நடந்ததை அறிவார்கள்" என்று பேசி அதிர்ச்சியை கிளப்பினார்.
அமைச்சர் சுரேகாவுக்கு குவிந்த கண்டனங்கள்
அமைச்சரின் இந்த பேச்சை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா இந்த விவகாரத்தில், "இருவரும் அவரவரின் விருப்பத்துக்கும், எண்ணத்துக்கும் மரியாதை செலுத்தும் விதமாக பரஸ்பரம் பேசி விவகாரத்து முடிவு எடுக்கப்பட்டது. தலைப்பு செய்தியில் வருவதற்காக பிரபலங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சாதமாக்கி கொள்வது வெட்கக்கேடானது" என தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
அதேபோல் நாகசைதன்யா தந்தை நாகர்ஜூனா, "அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனியுரிமையை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்துக்கு எதிரான வைத்த கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று அமைச்சரின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்தார்.
இதே போல் தெலுங்கு சினிமா முன்னணி பிரபலங்களான ஜூனியர் என்டிஆர். சிரஞ்சீவி, பிரகாஷ் ராஜ், வெங்கடேஷ், அல்லு அர்ஜூன், நானி உள்பட பலரும் அமைச்சரின் பேச்சை கடுமையாக விமர்சித்தனர்.
சுரேகா யூ டர்ன்
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமைச்சர் சுரேகா தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்க பதிவில், "ஒரு தலைவர் பெண்களை எப்படி இழிவுபடுத்துகிறார் என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே எனது நோக்கம். தவிர, உங்கள் உணர்வுகளை புண்படுத்த நோக்கம் அல்ல சமந்தா.
நீங்கள் அதிவேகமாக வளர்ந்த விதத்தை கண்டு வியக்கிறேன். எனது வார்த்தைகளால் நீங்களோ அல்லது உங்கள் ரசிகர்களோ புண்பட்டிருந்தால், நான் நிபந்தனையின்றி அவற்றை திரும்பப் பெறுகிறேன். தயவு செஞ்சு வேற மாதிரி எடுத்துக்காதீங்க" என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டவள் நான்
அமைச்சரின் பேச்சுக்கு நடிகை சமந்தாவும் தனது சமூக வலைத்தளபக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி ஊகங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண்ணாக இருப்பதற்கும், போராடுவதற்கும் நிறைய தைரியமும், வலிமையும் தேவை. இந்தப் பயணம் என்னை எப்படி மாற்றியது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். தயவு செய்து அதை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
இருவரின் தனியுரிமைக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி உங்களை கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து என்பது எனது தனிப்பட்ட விஷயம். எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்துள்ளது. இதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து அரசியல் விவகாரத்தில் இருந்து எனது பெயரை தூரமாக வைக்க முடியுமா? ஏனென்றால் நான் எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக இருக்கிறேன். அதை கடைசி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புகிறேன்.’’ என்றார்.