நிலம் வந்துருச்சு..சொந்த நிலத்தை மீட்க 20 ஆண்டு சட்ட போராட்டம்!கவுண்டமணி கைக்கு வந்த ரூ. 50 லட்சம் மதிப்பு சொத்து
Oct 08, 2024, 08:04 PM IST
சொந்த நிலத்தை மீட்க 20 ஆண்டு சட்ட போராட்டம் நடத்திய நிலையில், ரூ. 50 லட்சம் மதிப்பு சொத்து கவுண்டமணி கைக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களால் காமெடி கிங் என கொண்டாடப்படும் நடிகர் கவுண்டமணி, வணிக வளாகம் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொடுத்த நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு தனி நீதிபதி பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கவுண்டமணிக்கு சொந்தமான நிலம் தற்போது முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
கடந்த மார்ச் மாதத்தில் கவுண்டமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கவுண்டமணியின் நிலம் அவரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், நிலத்தின் சாவி கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. கவுண்டமணியின் இந்த நிலத்தின் மதிப்பு தற்போது ரூ.50 என கூறப்பட்டுள்ளளது.
2003 முதல் நடைபெற்ற சட்டபோராட்டம்
கடந்த 1996இல் சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கியுள்ளார். ஐந்து கிரவுண்டுகள் கொண்ட இந்த இடத்தில் சுமார் 22, 700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தார் கவுண்டமணி.
15 மாத்தில் இந்த கட்டட பணிகள் முடித்து தந்து ஒப்படைக்குமாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்காக ரூ. 3.58 கோடி ஒப்பந்ததாரர் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் இருந்து செலுத்தப்பட்டது.
கடந்த 2003ஆம் ஆண்டு வரை இந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என கூறி நடிகர் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நீதிபதி, வழக்கறிஞர் ஆணையர் நியமித்து உத்தரவிட்டதன் பேரில், சம்மந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்யப்பட்டு ரூ. 46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தனி நீதிபதி தீர்ப்பு
இதைத்தொடர்ந்து இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகள் முழுமையாக முடித்த பின்னர் பணம் தராவிட்டால் அதை கேட்க முடியும்.
தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர்.
நிலம் ஒப்படைப்பு
கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டு மேல் முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது கவுண்டமணியிடம் அவரது நிலம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் மூலம் சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக தனது நிலத்தை மீட்கும் போராட்டத்தில் கவுண்டமணி வெற்றி அடைந்துள்ளார்.
டாபிக்ஸ்