Thangalaan Release: கடன் சிக்கல்..அவசரமாக செலுத்தப்பட்ட தொகை..!தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு
கடன் சிக்கல் விவகாரத்தில் நீதிமன்றம் சொன்ன தொகையை அவசரமாக செலுத்தப்பட்ட நிலையில் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகவுள்ளது.
விக்ரம் - பா. ரஞ்சித் கூட்டணியில் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் தங்கலான் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி (நாளை) திரைக்கு வருகிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்ட சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட பணத்தை கட்டியதால் தங்கலான் வெளியீட்டுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கலான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சிக்கல்
சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார்.
இதையடுத்து அர்ஜூன்லால் சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரின் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு ரூ. 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த தொகையை வட்டியுடன் திருப்பிக் கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், ரூ. 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு 2013ஆம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணத்துடன் சேர்த்து சுமார் ரூ. 26 கோடி 34 லட்சம் செலுத்த வேண்டும். இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இடைக்கால உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், தங்கலான் படத்தை வெளியிடும் முன், அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பின் படத்தை வெளியிடலாம் என ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கை வந்தது. அப்போது, ரூ. 1 கோடி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் செலுத்திய நிலையில், தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீரியட் ஆக்சன் என்டர்டெய்னர்
கோலார் தங்க வயல் பின்னணியில்,தயாராகியிருக்கும் தங்கலான் திரைப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடசன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மொத்தம் 118 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமும் பெரிதும் எதிர்பார்க்கும் படைப்பாக 'தங்கலான்' இடம் பிடித்திருக்கிறது. கதைக்களம்- கதை சம்பவம் நடைபெறும் காலகட்டம்- பிரபலமான நட்சத்திர நடிகர்கள்- திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கடின உழைப்பில் படம் உருவாகியுள்ளது.
படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்