‘என்னிடம் துப்பாக்கி இருக்கு.. விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கவா?’ மதுரை ஆதீனம் ‘தெறி’ பேட்டி!
Oct 04, 2024, 09:33 PM IST
‘‘சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பற்றி கேளுங்கள் நான் பேசுகிறேன். சினிமாக்காரர்களை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் நான் எந்த நடிகரின் ரசிகரும் அல்ல. கையில் உள்ள 5 விரலும் ஒன்றவா இருக்கு.?’’
மதுரை வைகையாற்றை சுத்தப்படுத்துவதற்கு பணம் வேண்டும் என கூறி வழக்கறிஞர்கள் எனக் குறிப்பிட்டு சிலர் மதுரை ஆதீனம் மடத்திற்கு வந்ததாகவும், அப்போது பணம் தர ஆதீனம் மறுத்ததாகவும், பதிலுக்கு அவர்கள் தன்னை அவதூறாக பேசிவிட்டு மிரட்டி அவதூறாக பேசியதாக மதுரை ஆதினம் குற்றம் சாட்டினார். இது தொடர்பாகமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியதாவது:
ஆதீனத்தை மிரட்டியது யார்?
வைகை ஆற்றை சுத்தம் செய்ய நாள் ஒன்று 15 ஆயிரம் பணம் கேட்டு வழக்கறிஞர்கள் 3 பேர் வந்தார்கள். 20 நாள் சுத்தம் செய்யணும், அந்த பணத்தை நீங்கள் தரவேண்டும் என்று கேட்டதற்கு முடியாது என்றேன். அரசாங்கம் இருக்கு, மாவட்ட ஆட்சியர் இருக்கிறார் அனைவரும் சேர்ந்து தான் சுத்தம் செய்ய வேண்டும் தனிமரம் தோப்பாகாது உங்களால் செய்ய முடியாது. இதற்கு முன் இருந்த ஆதினம் எங்களுக்கு கொடுத்தார் என்று கூறினார்கள்.
அதற்கு நான், இதே போல்தான் பல வழக்கறிஞர்கள் அவரை ஏமாற்றி விட்டு சென்றனர். அதனால் உங்களுக்கு கொடுக்க முடியாது என்றேன். உடனடியாக அவர்கள் என்னை தாறுமாறாக அவதூறாக பேசி ஆதினமாக இருப்பதற்கு எனக்கு தகுதி இல்லை என கூறினார்கள். உங்க வீட்டிற்கு வந்து உனக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு, அந்த மாதிரி எனக்கு இருந்தது.
காவல் நிலையத்திற்கு எல்லாம் புகார் கொடுக்க நான் போக மாட்டேன், புகார் அளிக்கமாட்டேன். அடிக்கடி என்னை மிரட்டினால் அவர்களை நானே பார்த்துக் கொள்வேன் என்றார். இப்படி ஒவ்வொருத்தனு இறங்குவ அவனுக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா நம்மளே பார்த்துக்குவோம். ‘பழைய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தார் உங்களுக்கு அது தேவை இல்லையா.?’ என்ற கேள்விக்கு.. பதிலளித்த அவர், துப்பாக்கி எல்லாம் இருக்கு.! எனக்கு என் வாய் தான் துப்பாக்கி., நான் வாயிலேயே பேசிக் கொள்கிறேன் என்றார்.
என்னை வைகையில் தள்ளிவிடவா?
பழைய ஆதினத்திடம் இது போன்று யாரும் மிரட்ட வர மாட்டார்களே என்ற செய்தியாளர் கேள்விக்கு, மிரட்ட வர மாட்டார்களா போங்கய்யா நீங்க.! என கிண்டலாக பேசினார். வக்கீல் குருசாமி என்பவர் என்னை மிரட்டினார். வைகையை 20 நாளைக்கு சுத்தம் செய்யணும், நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். சுத்தம் செய்ய நீங்களும் வரணும் என என்னை அழைத்தார்கள். எனக்கு அவர்கள் பார்த்தவுடன் சந்தேகம் வந்தது. வக்கீல் என்கிறார், ஒரு நாளைக்கு 15,000 பணம் கொடு என்கிறார். என்னை கூட வைகைக்கு வா.. என்கிறார்கள்.
என்னை வைகையில் தள்ளி விட்டா..? என்ன செய்வது, எனக்கு நீச்சல்வேற தெரியாது நீ போங்கப்பான்னு பகல் கொள்ளையா இருக்கே என அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன். உங்களை எல்லாம் தூக்குறதுக்கு தான் பெரியாரை தோன்றினார் என பேசிவிட்டு சென்றனர் இதெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. பெரியாருக்கும் எனக்கும் சண்டையா நானும் தமிழ் ஆர்வலர், அவரும் தமிழ் ஆர்வலர். பெரியாருக்கும் எனக்கும் சண்டையா என பேசினேன்.
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கேட்டதற்கு அது வைணவம், நான் சைவம் என்றார். திருப்பதி லட்டு விவகாரம் குறித்து நான் பேச மாட்டேன் என்றார். திருப்பதி ஆந்திரா மாநிலம் நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி கேளுங்கள் என்றார். பழனி பஞ்சாமிர்தம் குறித்து கேட்டதற்கு என்ன கேள்வி கேக்குறீங்க எனக்கும் சேகர்பாபுவுக்கும் சண்டை மூட்டி விடறீங்களா.? என்றார்.
மோடியை ஆதரித்தீர்கள், முருகன் மாநாட்டிற்கு சென்று வந்த பிறகு திமுகவை ஆதரிக்கிறீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆதீனம், கூப்பிட்டா போகத்தான முடியும் வர மாட்டேன்னு சொல்லவா முடியும்.!_ எல்லாத்தையும் ஆதரிச்சு தான் போகணும். நீங்க சண்டை முட்டி வறதுக்குனே இருக்கீங்க.? எனக்கு நாலு கோவில் இருக்கு, நாலு சன்னிதானம் இருக்கு அரசாங்கத்தையே எதற்காக பகைத்து கொள்ள வேண்டும். கூப்பிட்டால் போய் தான் ஆகனும். பழனியில் அதுவும் முருகன் மாநாடு நடத்துகிறார்கள் அதற்காக திமுக கட்சியில் இணைந்து விட்டேன் என்றா அர்த்தம்.
முருகன் மாநாட்டில் எனக்கு உரிய மரியாதை கிடைத்தது, மரியாதையாக என்னை அழைத்துச் சென்றார்கள். பழனி கோபுரம் இடிந்ததற்கு அதை சரி செய்து தருகிறேன் என ஆணையர் உத்தரவாதம் அளித்திருக்கிறார் நிச்சயம் பணிகளை செய்வார்கள் என்றார். துணை முதல்வராக உதயநிதி வந்ததற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விஜய் பற்றி நான் பேச விரும்பல
நடிகர் விஜய் பற்றி கேள்வி கேட்டதற்கு, ‘சினிமாக்காரர்கள் பற்றி நான் பேசமாட்டேன். போன முறை நான் ஏதோ பேசப்போக, எனக்கு பேண்ட் சட்டை எல்லாம் போட்டு விட்டாங்க. விஜய் பற்றி நான் எதுவும் பேச விரும்பல.. அப்புறம் அவர் ரசிகர்கள் என்னை கல்ல விட்டு அடிக்கவா?,’ என்றார். பவன் கல்யாண் கூறியது குறித்த கேள்விக்கு அது குறித்து நான் பேச மாட்டேன் என்றார். நான் ஏதோ ஒன்று சொல்ல போக, அவரது ரசிகர்கள் என்னை விமர்சனம் செய்வார்கள்.
சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் பற்றி கேளுங்கள் நான் பேசுகிறேன். சினிமாக்காரர்களை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் நான் எந்த நடிகரின் ரசிகரும் அல்ல. கையில் உள்ள 5 விரலும் ஒன்றவா இருக்கு.? ஒரு உலகம் ஒன்று இருந்தால் நாலு பேரு நம்மளை விரட்டுவான், மிரட்டுவன் உருட்டுவான் இப்படி தான் இருக்கும் அதை எல்லாம் கண்டுக்க கூடாது, என்று ஆதீனம் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.