Neela Nira Sooriyan: வெளியாகும் முன்னே பாராட்டு... வரவேற்பை பெறும் 'நீல நிறச் சூரியன்'
Sep 30, 2024, 05:13 PM IST
Neela Nira Sooriyan: தமிழ் சினிமாவில் முதன் முதலாக திருநங்கை ஒருவர் இயக்கி நடித்துள்ள திரைப்படமான நீல நிறச் சூரியன் வெளியாகும் முன்னே பல பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை கேலிப் பொருளாகவும் இல்லை இழிபொருளாகவுமே சித்தரித்து வந்தனர். இந்த நிலை மாறுமா என எதிர்பார்த்து காத்திருந்த அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. சினிமா ரசிகர்களின் ரசனையும், இயக்குநர்களின் ரசனையும் மாறிவரும் நிலையில், சினிமாவில் தங்களின் பங்கும் மாறும் என எண்ணியவர்களை பார்த்தாலே பாவப்படும் கேரக்கடர்களில் நடிக்கவைத்து அந்த நம்பிக்கையையும் கெடுத்து விட்டனர்.
திருநங்கைகளின் வாழ்வியல் பேசும் படம்
இந்த நிலையில் தான், திருநங்கைகளின் வாழ்வியல் குறித்து படமெடுக்க வந்துள்ளார் சம்யுக்தா விஜயன். அடிப்படையில் ஒரு திருநங்கையான இவர், திருநங்கைகளின் வாழ்வியல் குறித்து பேசுவதே சரியாக இருக்கும் என எண்ணி நீல நிறச் சூரியன் எனும் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
இந்த நீல நிறச் சூரியன் திரைப்படத்தில் அவரே முதன்மை கதாப்பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவருடன், கீதா கைலாசம், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என மூன்று பணிகளையும் ஸ்டீவ் பெஞ்சமின் மேற்கொண்டுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன், மாலா மணியண் படத்தை தயாரித்துள்ளனர்.
நீல நிறச் சூரியன் உருவாக காரணம்
பொள்ளாச்சியை சொந்த ஊராகக் கொண்ட சம்யுக்தா, சிறு வயதிலிருந்தே தன்னை பெண்ணாக உணர்ந்துள்ளார். ஆனால், இதை வெளியில் எப்படி கூறுவது எனத் தெரியாமல், பரத நாட்டியம் கற்றுள்ளார். பின் மெல்ல மெல்ல தனது நடவடிக்கைகளையும் மாற்றியமைத்த போது, அது நாட்டியம் கற்றதால் வந்த மாற்றம் என வீட்டில் நினைத்ததாகக் கூறியுள்ளார்.
பின், நன்கு படித்ததன் விளைவாக அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்து அமெரிக்கா சென்றபோது, அங்கு தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டதாக கூறினார். இவரின் இந்த முடிவை அவரது குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர் எனவும், இது எந்த திருநங்கைகளுக்கும் அவ்வளவு எளிதில் நடப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
பின் கொரோனா சமயத்தில் பல படங்களைப் பார்க்க நேரம் கிடைத்தது. அப்போது தான் திருநங்கைகளை சினிமா எவ்வாறு சித்தரிக்கிறது என்பது புரிந்தது. அவர்களை ஏன் நம்முடன் வசிக்கும் சகமனிதர்களாய் காட்ட முற்படுவதில்லை என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாகவே இந்தப் படம் தற்போது உருவாகியுள்ளது என்றார்.
நடிகரானது ஏன்?
முதலில் இந்தப் படத்தை இயக்க மட்டுமே திட்டமிட்டதாக கூறிய சம்யுக்தா, ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகள் திரும்பவும் ஆணாக மாறி நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. அதனால், இந்தப் படத்தில் நானே நடித்தேன் என்றார்.
என்ன சொல்கிறது படம்?
தற்போதைய காலகட்டத்தில் பலரும் பாலின மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பக்குவம் பலருக்கும் இல்லை. ஒருவேளை நான், அந்த காலகட்டத்தில் பெண்ணாக மாறியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதையே கதையாக மாற்றினேன். இந்தப் படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்துள்ளேன். முதல் நாள் வரை ஆணாக இருந்த ஒரு ஆசிரியர் அடுத்த நாள் பெண்ணாக மாறினால் மாணவர்கள் எப்படி அதை உள்வாங்கிக் கொள்வர் என்பதை வைத்தும் இந்தப் படத்தை நகர்த்தியுள்ளேன் என்றார்.
குவியும் பாராட்டுகள்
இந்த நீல நிறச் சூரியன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கு முன்பாகவே, 23 திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் IFFI-23 உள்ளிட்ட உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்தின் டிரைலரை பகிர்ந்து படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, தமிழில் வெளியான சிறிய பட்ஜெட் படங்கள், மண் சார்ந்த மற்றும் மக்கள் சார்ந்த விஷயங்களை பேசியதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வகையில், இந்தப் படமும் வெற்றி பெரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.