ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டில் திருநங்கைகள் பாலின மாற்று சிகிச்சைக்கு அனுமதி
ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா மருத்துவ காப்பீடு திட்டத்தில் திருநங்கையரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி: உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2018ல் அறிமுகப்படுத்தியது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதுவரை சுமார் 18 கோடியே 50 லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய சுகாதார ஆணையம் மற்றும் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இடையே ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தை திருநங்கைகளுக்கும் விரிவுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இது தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத், பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா திட்டத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளில் திருநங்கைகளும் இனி சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர். சமூக நீதி அமைச்சகம் சார்பில், ஒவ்வொரு திருநங்கைக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வசதி பெற இயலும். இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற திருநங்கைகளுக்கான தேசிய போர்டலில் பதிவு பெற்று, திருநங்கை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஆயுஷ்மான் திட்டத்தில் இணைவோருக்கு, பாலின மாற்று அறுவை சிகிச்சை உள்பட சிறப்பு ஒருங்கிணைந்த சிகிச்சை மருத்துவ தொகுப்புகளை பெற முடியும். ஒன்றிய அல்லது மாநில அரசு வழங்கும் பிற திட்டங்களில் இருந்து இத்தகைய பலன்களைப் பெறாத அனைத்து திருநங்கைகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் திருநங்கையர் ஆணாகவோ, பெண்ணாகவோ தங்களை சுயமாக அடையாளப்படுத்தி கொள்ள உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனை மனமார வரவேற்றுள்ள ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், 'இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், திருநங்கையர் சமூகத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதன் மூலம் திருநங்கையர் சமூகத்திற்கு சிறப்பு மருத்துவ சேவை நன்மைகள் அளிப்பது, பின்தங்கிய அவர்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் மேலானது' இவ்வாறு அவர் கூறினார்.