எம்.ஜி.ஆரின் இதய வீணை முதல் அஜித்தின் வரலாறு வரை.. அக்.20ல் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்ற தமிழ்ப் படங்கள்!
Oct 20, 2024, 08:12 AM IST
எம்.ஜி.ஆரின் இதய வீணை முதல் அஜித்தின் வரலாறு வரை.. அக்.20ல் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்ற தமிழ்ப் படங்கள் குறித்துப் பார்ப்போம்.
அக்டோபர் 20ஆம் தேதியான இன்று பல சுவாரஸ்யமான, வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. குறிப்பாக விஜயகாந்த் நடித்த பேரரசு, எஸ்.பி. ஜனநாதன் எழுதி இயக்கி வெளிவந்த ஈ திரைப்படம், பார்த்திபன்,ரோஜா, தேவயானி, பிரியா ராமன் நடித்த புதுமைப் பித்தன் திரைப்படம், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளியான இதய வீணை திரைப்படம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்படங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இதய வீணை: இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் - பஞ்சு ஆகிய இருவரின் இயக்கத்தில், கே.சொர்ணம் என்பவரின் எழுத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன், லட்சுமி, மஞ்சுளா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், இதய வீணை. இப்படத்துக்கு சங்கர் கணேஷ் இயக்க, ஒளிப்பதிவினை ஏ.சண்முகம் புரிந்து இருந்தார். எம். உமாநாத் எடிட் செய்திருந்தார். வீட்டில் இருந்து தந்தையால் துரத்தப்பட்ட மகன், எவ்வாறு மீண்டும் தன் தங்கைக்காக வீடு திரும்பினான் என்பது குறித்தும், அவன் எதிர்கொண்ட பிரச்னைகளைக் குறித்தும் படம் பேசுகிறது. இப்படம் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் வெளியான முதல் திரைப்படமாகும். இப்படம் 1972ஆம் ஆண்டு, அக்டோபர் 20ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் வரும் ஃபியூட்டிஃபுல் காஷ்மீர், திருநிறைச் செல்வி ஆகியப் பாடல்கள் ஹிட்டாகின.
புதுமைப்பித்தன்:
1998ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி வெளியான அரசியலை கிண்டலடிக்கும் பாணியிலான படம், ‘புதுமைப் பித்தன்’. இப்படத்தில் பார்த்திபன், தேவயானி, பிரியா ராமன், ஆனந்த ராஜ், ரஞ்சித் ஆகியோர் நடித்து இருந்தனர்.
படத்தின் கதைப்படி, சமூக ஆர்வலரான ஜீவாவை, அவரது நண்பன் மகேஷ் தனது வீட்டுக்கு அழைத்து வருகின்றான். அங்கு மகேஷின் மனைவியாக இருப்பது ஜீவாவின் முன்னாள் காதலி ஆர்த்தி. ஒரு ஊழல் அதிகாரியை பாதுகாத்ததால், ஆர்த்தியின் அப்பாவை ஜீவாவின் ஆதரவாளர்கள் தாக்கிவிடுகின்றனர். இதனால், ஆர்த்தியும் ஜீவாவும் பிரிகின்றனர். அதன் பின் மீண்டும் ஆர்த்தியைப் பார்த்துவிட்டு, வெளியில் வரும் ஜீவா சில நாட்களில் அரசியல் சூழ்ச்சியால் மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். பின் அங்கு இருந்து தப்பும் அவர் வெளியில் பரத் என்ற பெயரில் உலாவுகிறார். பின் பல சமூகப் பணிகள் செய்து அமைச்சராகிறார்.
வரலாறு:
2006ஆம் ஆண்டு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மதனா என்ற கதையை சிறுதிருத்தங்கள் செய்து டேக் ஆஃப் ஆகி, அக்டோபர் 20ஆம் தேதி ரிலீசான திரைப்படம் தான், வரலாறு. இப்படத்தில் அஜித், அசின், கனிகா, ரமேஷ் கண்ணா, சுமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் மற்றும் பிரியன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருந்தனர். இப்படத்துக்கு ஏ.ஆர். இசையமைக்க, இயக்கத்தை கே.எஸ்.ரவிகுமாரும், தயாரிப்பினை நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தியும் செய்திருந்தனர். அஜித் குமார் மூன்று ரோல்களில் நடித்து இருந்த இப்படம், ரூ.12 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடி வசூலித்தது.
ஈ: இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா, கருணாஸ் மற்றும் பசுபதி ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், ஈ. பலரைக் கொல்ல அயல்நாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மருந்தை மனிதர்களைக் கொண்டு பரிசோதிக்க முயற்சிக்கும் சோதனையை கதையின் நாயகனான ஈ என்கிற ஈஸ்வரன் முறியடிப்பது எப்படி என்பது தான் கதை. இப்படம் நடிகர் ஜீவாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம்.
தர்மபுரி: இயக்குநர் பேரரசு இயக்கத்தில் ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஜயகாந்த், ராய் லட்சுமி, மணிவண்ணன், ராஜ் கபூர், விஜயகுமார், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் தான், தர்மபுரி. மக்களைச் சுரண்டும் நிலப்பிரபுவுக்கு எதிரான போராளியாக சிவராமன் என்னும் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தர்மபுரி போட்ட முதலீடைத்தாண்டி லாபத்தை எடுத்தது.
டாபிக்ஸ்