Mohan G: சமூக அக்கறை கொண்டவன் நான்... இவரால் தான் நான் இப்படி பேசினேன்... காரணம் கூறிய மோகன் ஜி
Sep 26, 2024, 01:04 PM IST
Mohan G: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை கூறியதாக இயக்குநர் மோகன் ஜி கைது செய்யப்பட்ட நிலையில், இவர் கொடுத்த தைரியத்தின் காரணமாகவே இந்த செய்தியை வெளியில் கூறினேன் எனப் பேசிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விவகாரமாக உள்ளது திருப்பதி லட்டு பிரச்சனை. அந்த விவகாரம் முடிவதற்குள்ளாகவே, தமிழ்நாட்டில் பழநி பஞ்சாமிர்தம் குறித்து பேசிஅடுத்த பூகம்பத்தை கிளப்பியுள்ளார் இயக்குநர் மோகன் ஜி.
தற்போது பழநி பஞ்சாமிர்தம் குறித்து தான் பேச ஆந்திர முதலமைச்சர் தான் தனக்கு தைரியத்தை கொடுத்தார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திருப்பதி லட்டு
திருப்பதி லட்டில் விலங்குகளின் எச்சங்கள் கலந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இ்ந்த சம்பவத்தில் இந்து மக்களின் மனம் புண்படும்படி சிலர் நடந்துவிட்டதாகக் கூறி பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த சிலர் மிகவும் எதிர்மறையான கருத்துகளைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேடி வந்தனர்.
பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை
இந்த நிலையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளது எனக் கூறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களின் இயக்குநரான மோகன் ஜி. இந்நிலையில், திருச்சி சமயபுரம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் அளித்த புகாரின் காரணமாக, இவர் கைதும் செய்யப்பட்டார்.
மோகன் ஜி கைது
பின் ஜாமீனில் வெளி வந்த இவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நான் என் குழந்தையைப் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்ட போது, மஃப்டியில் வந்த போலீசார் என் வீட்டு வாசல் முன்பே என்னை கைது செய்தனர். வீட்டிற்கு சென்று வேறு உடை மாற்றி வருகிறேன் என எவ்வளவு கூறியும் என்னை விடவில்லை. மனைவி மற்றும் வக்கீலிடம் கூறி வருகிறேன் என்ற போதும் எதுவும் கேட்காமல் என்னை குண்டுக்கட்டாக அழைத்து சென்றனர். அப்போது ராயபுரம் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, திருச்சி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
ஜாமீன்
பின், கைதுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை, என்னுடைய கேள்விகளுக்கு கூட அவர்களிடம் பதில் இல்லாத நிலையில் தான் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது தான் வக்கீல் பாலு எனக்கு ஜாமீன் வாங்கித் தந்தார்.
இவர் அளித்த தைரியம் தான்
நான் மிகுந்த சமூக அக்கறை கொண்டவன். ஆந்திர முதலமைச்சர் திருப்பதி லட்டு குறித்த குற்றச்சாட்டுகளை பொது வெளியில் சொன்னார். அந்த தைரியத்தில் தான் நான் இங்கு, தமிழ்நாட்டில் பஞ்சாமிர்தம் குறித்து செவிவழியாகக் கேட்ட செய்தியை குற்றச்சாட்டாக முன்வைத்தேன். இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை என்னுடைய குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அந்தத் தவறுகள் அனைத்தும் சரி செய்யப்படும் என்ற சமூக அக்கறையில் தான் பேசினேன். எனக்கு வேறெந்த உள்நோக்கமும் இல்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது" என பேசினார். இதனால், தமிழ்நாட்டில் மீண்டும் பஞ்சாமிர்தம் குறித்த பேச்சுகள் அடிபட்டு வருகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.