தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நான் சண்டை போடவும் விரும்பல.. வீம்பு பிடிக்கவும் விரும்பல.. இங்க எல்லாமே ஆசாமி தான்- போஸ் வெங்கட் பளீச்

நான் சண்டை போடவும் விரும்பல.. வீம்பு பிடிக்கவும் விரும்பல.. இங்க எல்லாமே ஆசாமி தான்- போஸ் வெங்கட் பளீச்

Oct 16, 2024, 09:12 PM IST

google News
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினருடனோ, நடிகர் விமலுடனோ தனக்கு எந்த சண்டையும் இல்லை என இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினருடனோ, நடிகர் விமலுடனோ தனக்கு எந்த சண்டையும் இல்லை என இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினருடனோ, நடிகர் விமலுடனோ தனக்கு எந்த சண்டையும் இல்லை என இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கமளித்துள்ளார்.

கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு மா.பொ.சி என முதலில் பெயரிட்டிருந்தார். ஆனால், இந்தப் படத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என நடிகர் சிவக்குமார் கூறியதாக தெரிகிறது. இதனால், இப்படத்தின் பெயர் சார் என மாற்றப்பட்டு படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் நடந்து வந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்காத விமல்

இந்நிலையில், இன்று சென்னையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் ஹீரோ விமல் கலந்து கொள்ளாதது பலரையும் கேள்விக்கு உள்ளாக்கியது. பின் இதுகுறித்து படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட் விளக்கமளித்தார். சென்னையில் பெய்த தொடர்மழை காரணமாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், மழை ஏதும் இன்று பெய்யாத காரணத்தால் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை இன்றே நடத்த வேண்டிய சூழல் உண்டானதாக தெரிவித்தார். இதனால், வெளியூரில் இருக்கும் விமலால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மற்றபடி எனக்கும் விமலுக்கும் எந்த சண்டையும் இல்லை. நாங்கள் உறவினர்கள் எங்களக்குள் எந்த சண்டையும் இல்லை என விளக்கமளித்தார்.

26 இடங்களில் கை வைத்த சென்சார்

சார் படத்தை 26 இடங்களில் கட் செய்து வெளியிட வேண்டும் என தணிக்கை குழு அறிவுறுத்தியது. இதில் எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் நான் அனைத்திற்கும் சம்மதித்தேன். நான், தணிக்கை குழுவின் முடிவுக்கு கட்டுப்படாமல் வீம்பு பிடிக்கவில்லை. ஏனென்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் பல இடங்களில் கடன் வாங்கி படத்தை எடுக்க உதவியிருப்பார். இதனால், நான் தணிக்கை குழுவின் முடிவுக்கு முழு மனதாக கட்டுப்பட்டேன். திரைப்படத்தில் மட்டும் தான் தணிக்கை குழுவால் என்னை கட்டுப்படுத்த முடியும். படம் வெளியான பின் யூடியூபில் நான் அனைத்து காட்சிகளையும் வெளியிடுவேன்.

வெற்றிமாறனுக்கு நன்றி

சார் படத்தை ஓடிடியில் வாங்க நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவை அனைத்தும் வெற்றிமாறனால் நிகழ்ந்த ஒன்று. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்றார்.

நான் திராவிட இயக்கத்தை சார்ந்தவனாக இருந்தாலும் இந்தப் படத்தில் எனது கருத்தியல் எதையும் திணிக்கவில்லை. கல்வி சார்ந்த படம் என்பதால், நான் கூற வந்த கருத்தை அனைவரும் நிச்சயம் ஏற்றுக் கொள்வர்.

சாமி பிரச்சனை அல்ல ஆசாமி தான்

கல்விக்கென தனியாக கடவுள் இருந்த போதிலும் இங்கு, சிலர் கடவுள் பெயரை பயன்படுத்தி மக்களை தடுக்கின்றனர். நான் கடவுள் மறுப்பாளன் அல்ல. என்னை முன்னேற்றும் அனைத்துமே கடவுள் தான். இங்கு கல்வியைத் தடுப்பது சாமி அல்ல. அந்தப் பெயரை பயன்படுத்தும் ஆசாமி தான். நான் அவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன் என்றார்.

இந்தப் படத்தில் பெரும்பாலான சம்பவங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது தான். இந்தப் படத்தில் வரும் அரசன் என்ற வாத்தியார் என் வாத்தியாரை மாதிரியாக வைத்து உருவாக்கியிருப்பேன். மேலும், பல காட்சிகள் நான் படித்த புத்தகங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் ஏற்பட்டது என்றார்.

சிவக்குமாரிடம் சண்டை இல்லை

முதலில் மாபொசி என்ற பெயர் தான் படத்திற்கு வைக்கப்பட்டது. ஆனால், நடிகர் சிவக்குமார் இந்த பெயரை வைத்து ஆவணப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறினார். இந்தப் பெயரில் சில மாற்றங்கள் செய்தாலும் இருவரின் படத்தையும் அது பாதிக்கும் என்பதால் நான் படத்தின் பெயரை சார் என மாற்றினேன். மற்றபடி எனக்கும் நடிகர் சிவக்குமார் குடும்பத்திற்கும் எந்தவித சண்டையும் இல்லை என விளக்கமளித்தார்.

நான் முன்னேற இவர்கள் தான் காரணம்

எந்தப் பள்ளிக்கூடத்திலும் காமராஜரின் புகைப்படத்தையும் அண்ணாவின் புகைப்படத்தையும் ஒன்றாக வைத்ததில்லையே என பயில்வான் கடைசியாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போஸ் வெங்கட், காமராஜரும், அண்ணாவும் இல்லையென்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இது என்னுடைய எண்ணம். அதனால் அவர்கள் படத்தை ஒன்றாக வைத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

முன்னதாக சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த வாகை சூடவா திரைப்படத்திலும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றிருப்பார். தற்போது போஸ் வெங்கட்டுடன் இணைந்து சார் படத்திலும் அதே கதையை கையில் எடுத்துள்ளார். வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் இந்தப் படம் மக்களிடம் என்ன வரவேற்பை பெருகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி