OTT Censor: ஒழுக்கம்... அறம்... கலாச்சாரத்தை மீறும் ஓடிடி தளங்கள்... பாயுமா சென்சார்... கடிவாளம் போட நினைக்கும் கோர்ட்!
OTT Censor: ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் ஒழுக்கம், அறம், கலாச்சாரம் போன்றவற்றை மீறுவதால் அதற்கு சென்சார் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு முடிவு செய்து பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாச்சார சீர்கேடு, போதைப் பொருள் பழக்கம், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களுக்கும் தணிக்கை அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்படத்தில் சென்சார்
திரைத்துறையில் வெளியாகும் படங்கள் அனைத்தும் திரைப்படத் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, படத்திற்கான தணிக்கை சான்றிதழை பெற்ற பின்னர் தான் திரையரங்கிற்கே வரும். இந்த அமைப்பு, படத்தில் வரும் வசனம், காட்சி அமைப்பு, பாலியல் ரீதியான தவறான சித்தரிப்புகள், மத உணர்வுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு படத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை அறிவிக்கும்.
பின் இந்தப் படம் எந்த வயதினருக்கு ஏற்றது. இது குடும்பத்தினரோடு சென்று பார்க்கும் படமா, அல்லது 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கும் படமா என வரிசைப்படுத்தி சான்றிதழை அளிக்கும்.
ஓடிடி ஆர்வம்
இந்த சான்றிதழை வைத்தே படம் திரையாகும் இடங்கள் கூட முடிவு செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தணிக்கை சான்றிதழ் பெற காலதாமதமானதால் ரிலீஸ் தள்ளிப்போன படங்களும் ஏராளம்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தற்போது பலரும் படைப்பு சுதந்திரம் வேண்டும் எனக் கருதி, தங்களது திரைப்படங்களை அல்லது படைப்புகளை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடுகின்றனர். ஓடிடி தளங்களுக்கு சென்சார் சான்றிதழ் கிடையாது என்பதால் பெரும்பாலானோர் ஓடிடியில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் தியேட்டரில் வெளியாகும் போது சென்சார் செய்யப்பட்ட காட்சிகளை ஓடிடி தளத்தில் நீட்டித்தும் படங்களை வெளியிட்டு வந்தனர்.
நீதிமன்றத்தில் மனு
இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவகங்கையை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “இந்தியாவில் திரைப்பட தணிக்கை வாரியம் 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒழுக்கம், அறம் மற்றும் கலாச்சாரத்தை மீறும் வகையில் உள்ள காட்சிகள், வசனங்கள், பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை திரைப்பட தணிக்கை சட்டத்தின் கீழ் இந்திய திரைப்பட தணிக்கை வாரியம் தணிக்கை அதாவது சென்சார் செய்து வெளியிடும். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் திரைப்படங்களோ வெப் தொடர்களோ தணிக்கை செய்து வெளியிடப்படுவதே இல்லை.
மேலும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, போதைப் பொருட்கள் பயன்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதேசமயம், நாளுக்கு நாள் ஓடிடி தளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நீதிமன்றம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் தொடர்களை தணிக்கை செய்து ஒழுங்கு படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியம் மற்றும் விக்டோரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக மத்திய உள்துறை செயலர், மத்திய தொலை தொடர்பு செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையையும் ஒத்திவைத்தனர்.
சினிமா வட்டாரங்களின் புலம்பல்
முன்னதாக, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இது பெரிய நடிகர்களின் படங்களை அதிக தொகை கொடுத்து வாங்க விருப்பம் காட்டுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதனை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித்தும் வழிமொழிந்தார். இந்த நிலையில், ஓடிடி தளங்களுக்கு சென்சார் அளித்தால், படைப்பாளர்களின் சுதந்திரம் முற்றிலும் பாதிக்கப்படும் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்