Sarathkumar: சரத்குமாருக்கு எதிராக தனுஷ் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு! காரணம் என்ன?
Jun 06, 2024, 05:00 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் பொதுவான இடத்தை வணிக நோக்கில் ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் தனுஷ் தாயார் விஜயலட்சுமி, நடிகர் சரத்குமாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் பகுதியில் இருக்கும் ராஜமன்னார் தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடிகர் தனுஷின் தாயார் விஜயலட்சுமி வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வரும் நுஷ்ரத் அபிதா, ஜாபர் ஆயிஷா பீவி, திருநாவுக்கரசு ஆகியோரும், தனுஷ் தயார் விஜயலட்சுமியும் சேர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
சரத்குமாருக்கு எதிராக வழக்கு
அவர்களது மனுவில், "அனைவருக்கும் பொதுவான அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெளியில் உள்ள மேல்தளத்தை சில குடியிருப்பு வாசிகள் தடுத்து வருகின்றனர்.
அதேபோல தரைத்தளத்தில் உள்ள பொதுவான பகுதியை நடிகர் சரத்குமார் தனது நிறுவனத்துக்காக சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.
நீதிபதிகள் உத்தரவு
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும்இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "குடியிருப்பின் பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை தடுக்கக் கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
கண்டுகொள்ளாத மாநகராட்சி
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விஜயலட்சுமி உள்ளிட்டோர் சென்னை மாநகராட்சியிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மாநகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
பேசி தீர்க்க வேண்டிய பிரச்னை
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்துள்ளார். தற்போதும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருக்கும் தனுஷ் பிஸியான நடிகராக உள்ளார். தனுஷ் - சரத்குமார் ஆகியோர் இணைந்து இதுவரை நடித்தது இல்லை.
சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா, 2015இல் தனுஷ் நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் அவரது தாயாராக நடித்திருந்தார்.
இதற்கிடையே, இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக இரு தரப்பினர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய இந்த பிரச்னையை தற்போது நீதிமன்றம் வரை கொண்டு வந்திருப்பதாக கோலிவுட்டினர் பேசிக்கொள்கிறார்கள்.
தனுஷ் அடுத்த படம்
தனுஷ் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இது அவரது 50வது படமாகும். அத்துடன் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சரத்குமார் நடித்திருக்கும் புதிய படமான ஹிட்லிஸ்ட் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்