மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு
Nov 21, 2024, 10:00 PM IST
புழல் சிறை வளாகத்தில் மக்கள் தலைவி கஸ்தூரி என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட, செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனக்கு ஆதரவாக இருந்த பலருக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் நாள்தோறும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சீறும் புயலாக மாறியுள்ளேன்
ஐந்து நாள்கள் சிறைவாசம் அனுபவித்த கஸ்தூரி, ஜாமினில் வ விடுவிக்கப்பட்டு வெளியே வந்தபோது சிறை வளாகத்தில் தன்னை வரவேற்க காத்திருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டார். அப்போது அவரை பார்த்து மக்கள் தலைவி என ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.
இதன் பின்னர் சிறை வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "என்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி. வழக்கறிஞர்களுக்கு நன்றி.
அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்காக ஆதரவு கொடுத்து அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.
ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு மிக பெரிய, மனம் மிகுந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்தியவர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிக பெரிய நன்றி" என்று கூறியுள்ளார்.
கஸ்தூரிக்கு ஜாமின்
நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தனக்கு ஆட்டிசம் பாதித்த குழந்தை இருப்பதால்,குழந்தையைப் பராமரிக்கக்கோரி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மேஜிஸ்திரேட் தயாளின் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க காவல்துறை ஆட்சபேனை கூறவில்லை. அதன்பின், நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என காஸ்தூரிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்தபின் நடிகை காஸ்தூரி இன்று மாலை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கஸ்தூரி கைது
தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி மீது திருச்சியிலும் 3 பிரிவுகளின்கீழ் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தேனி மாவட்டம் - ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை தொடர்புகொள்ள முடியவில்லை, கஸ்தூரி தலைமறைவானார் என தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர் சென்னை எழும்பூர் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தற்போது ஜாமின் கோரி மனு தாக்கல் செய்து நிபந்தனை ஜாமினில் கஸ்தூரி விடுவிக்கப்பட்டுள்ளார்.