இதெல்லாம் தேவையா கோபி? வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளும் சூர்யா.. படம் ரிலீஸ் சமயத்தில் தொக்கா சிக்கிய பிரச்சனை!
Oct 29, 2024, 04:13 PM IST
டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் என்ற போது ஏன் நடிகரின் மகன் நடிகராக வரக்கூடாது என நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கேள்வி எழுப்பி தற்போது நெட்டிசன்களால் தாக்கப்பட்டு வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல ஆண்டுகள் நடித்தும் மக்கள் மத்தியில் கவனம் பெறாமல் இருந்த விஜய் சேதுபதி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் உதவியால் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து, அவர் கதாநாயகனாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதும், துணை கதாப்பாத்திரம், வில்லன் கதாப்பாத்திரம் போன்றவற்றையும் ஏற்று நடித்து தற்போது சினிமா உலகின் புகழின் உச்சியில் இருக்கிறார்.
சூர்யா சேதுபதி
இந்த சமயத்தில் தான் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்திலும், சிந்துபாத் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து தற்போது, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு எடுக்கும் ஃபீனிக்ஸ் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர், இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கிய சமயத்தில் இருந்தே பிரச்சனை தான். சமூக வலைதளங்களில் பலரும் சூர்யா சேதுபதி நடிக்க வருவதை எதிர்த்து பல கருத்துகளைக் கூறி வந்தனர்.
அப்பாவின் ஊக்கம்
மிகவும் பருமனாகவும், கதாநாயகனுக்கான உடல் அமைப்பும் இல்லாமல், தனது தந்தையின் பெயரையும் புகழையும் பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதாக பலரும் சூர்யாவை விமர்சித்து வந்தனர். இதையடுத்து அவர், தீவிர முயற்சியில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்து சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். பின், சோசியல் மீடியாவில் தன்னைப் பற்றி வரும் கிண்டல்களுக்கு பதிலளித்த சூர்யா, நான் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்தபோது 120 கிலோ எடையில் இருந்தேன். முகம் எல்லாம் அசிங்கமாக இருக்கும். இதனால், என்ன செய்வது என தெரியாமல் அப்பாவிடம் கேட்டேன். அப்போது அவர் தான், நீ படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்து, எல்லாம் சரியாகிவிடும் எனக் கூறினார். அவர் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். ஆனால், பலரும் நான் அப்பாவை எதிர்த்து சினிமாக்குள்ள வந்தது போன்று வதந்திகளைப் பரப்பி வருகின்றனர் என தன் பக்க நியாயத்தைக் கூறினார்.
500 ரூபாய் பாக்கெட் மணி
இதையடுத்து, சூர்யாவின் ஃபீனீக்ஸ் பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, என் தந்தை தினமும் நான் செலவு செய்வதற்காக 500 ரூபாய் மட்டும் தான் தருவார். இதை வைத்துக் கொண்டு என்னால் எதுவும் செய்ய முடியாததால் தான் நான் சினிமாவில் நடித்து சம்பாதிக்க வந்தேன் எனக் கூறியது பெரும் சர்ச்சையானது. ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்றால் மாதம் எவ்வளவு ரூபாய் எனத் தெரியுமா? இந்த 500 ரூபாயை மாத செலவுக்கு கூட இல்லாதவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் எனத் தெரியுமா எனக் கேள்வி எழுப்பி அவரை ஒரு வழி செய்தனர். பணத்தின் அருமை தெரியவில்லை. தந்தையின் உழைப்பை சுரண்டுகிறார் என பல குற்றச்சாட்டுகளை சூர்யா மீது அடுக்கினர்.
அப்பாவின் பெயரை பயன்படுத்தி சினிமா வாய்ப்பு
இந்தப் பிரச்சனையே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த பஞ்சாயத்தை இழுத்து வைத்துள்ளார் சூர்யா. ஃபீனிக்ஸ் திரைப்படம் குறித்த புரொமோஷனுக்காக சினிமா விகடன் யூடியூபிற்கு அவர் அளித்த பேட்டி தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
இந்தப் பேட்டியில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு எப்படி கிடைத்தது. அப்பா சினிமாவில் இருப்பதால் இவை உங்களுக்கு எளிதில் கிடைக்கிறதா என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார், இதைக் கேட்ட சூர்யா, வாய்ப்புகள் வேண்டுமானால் எனக்கு எளிதாக கிடைத்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைக்க மிகவும் உழைக்க வேண்டும் என்றார். அத்துடன், டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் என்ற போது ஏன் நடிகரின் மகன் நடிகராக வரக்கூடாது என்ற சந்தேகம் எழுந்துகொண்டே இருக்கிறது என்றார்.
இவரின் இந்தப் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகிறது. டாக்டர் மகனும், போலீஸ் மகனும் அதே வேலையைச் செய்ய முறையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சினிமாவில் நடிக்க அப்படி என்ன தேர்வு இருக்கிறது. இங்கு வாய்ப்புக்காக எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்பது தெரியுமா? என சூர்யாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
டாபிக்ஸ்