வேறு வழியே இல்லாமல் நடித்து சொதப்பிய சூர்யா.. கிடுக்குப்பிடி கேள்வியால் சிக்க வைத்த இயக்குநர்..
Nov 15, 2024, 12:25 PM IST
நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நடிகர் சூர்யா சினிமாவிற்கு நடிக்க வந்த கதையை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிகர் சித்ரா லக்ஷுமணனின் டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டி தான் இப்போது வைரலாகிறது.
கங்குவாவில் சம்பவம் செய்த சிவக்குமார்
முன்னதாக கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா குறித்து அவரது தந்தை சிவக்குமார் பேசியது வைரலானது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சூர்யாவிற்கு சேர்ந்தது போல் 4 வார்த்தை பேசத் தெரியாது, கஷ்டப்பட்டு படித்தான், கூட்டி பெருக்கும் வேலை செய்து கொண்டிருந்தான் என பலத் தகவல்களை கூறினார். இவரது இந்தப் பேச்சுக்கு பலரும் கருத்து தெரிவித்த நிலையில், சூர்யா சினிமாவிற்குள் எப்படி அடி எடுத்து வைத்தார் எனக் கூறியுள்ளார் நடிகர் சிவக்குமார்.
சினிமாவில் ரிஸ்க் அதிகம்
சினிமாத் துறைக்கு என் பிள்ளைகள் வர வேண்டும் என நான் நினைக்க வில்லை. இதிலிருக்கும் ரிஸ்க் என்னவென்று நமக்கு தெரியும். இதனால், என் பிள்ளைகள் படித்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன் என சிவக்குமார் கூறியுள்ளார்.
ஒரு நடிகர், அவரது பையனோ, பெண்ணோ சினிமாவிற்கு வந்து வெற்றி பெற்றார்கள் என்பதை தேடுவது மிகக் கடினம். சிலருக்குத் தான் அந்த வாய்ப்பு எல்லாம் கிடைத்தது. 10 ஹீரோக்கள் சினிமாவில் கோலோச்சி இருந்தால் அதில் 9 பேரின் பிள்ளைகள் சினிமாவில் தோத்துப் போய் விட்டனர்.
செட் ஆகலன்னா அடுத்த வேலைய பாக்கணும்
அதனால், என் பிள்ளைகளின் வாழ்க்கை என்பது விளையாட்டு விஷயமல்ல. இன்னைக்கு தோத்தா நாளைக்கு ஜெயிக்கலாம் என்று இருப்பதற்கு. நானே ஓவியராவதை விட்டுவிட்டு ஏன் சினிமாவிற்கு நம்பி வந்தேன் என்றால், ஒருவேளை நான் சினிமாவில் தோற்றுவிட்டால், படம் வரைந்து பிழைத்துதக் கொள்வேன். சினிமா எல்லாருக்குமான துறை கிடையாது.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவர்களது வாரிசு சினிமாவிற்குள் தராலமாக வர முடியும். ஒரு முறை சினிமாவில் நடித்து பார்ப்போம். ஜெயிச்சா ஓகே. இல்லைன்னா அடுத்த வேலைய பாத்துட்டு போகனும்ங்குற மாதிரி தான் நான் பசங்கள வளர்த்தேன்.
சூர்யா நடிக்க நான் ஒத்துக்கல
முதல்ல சூர்யாவுக்கு பட வாய்ப்பு வந்த போது நான் மறுத்தேன். சூர்யாவுக்கும் நடிக்க விருப்பமே இல்ல. எங்கப்பா நடிச்சா நான் நடிக்கனுமா. அவரு டயலாக் பேசுனா நான் பேசனுமா அப்டின்னு தான் சூர்யா கேட்டான். வேணும்னே வயித்துக்கு மேல பேண்ட் போட்டு அதுக்கு மேல பெல்ட் கட்டிட்டு போவான். அதுமட்டுமில்லாம படிச்சு முடிச்சிட்டு என் மாமா மாதிரி நானும் எக்ஸ்போர்ட் கம்பெனி வச்சு நடத்துவேன்னு சொல்லிட்டு இருப்பான்.
அதுக்காக 6 மாசம் ஒரு கம்பெனியில போயி வேல செஞ்சு மேட் எல்லாம் தட்டிப்போட்டு கூட்டி பெருக்கிட்டு இருப்பான், அப்புறம் அவன் என்னோட பையன்னு தெரிஞ்சதும் இதுல என்ன இருக்கு நான் வேல செய்ய தான வந்தேன்னு சொல்லுவான்.
தேடி வந்த வாய்ப்பு
ஒரு டைம்ல எங்க பேமிலி டாக்டர பிக்அப் பண்ண அவன் ஏர்போர்ட் போனான். அப்ப தான் டைரக்டர் வசந்த் சூர்யாவ முதல்முதல்ல பாக்குறாரு. அப்போ டாக்டர்கிட்ட வசந்த் இந்த பையன் யாருன்னு கேட்டப்போ தான் சூர்யாவைப் பத்தி தகவல் தெரியுது.
இதுக்கு அப்பறம் டைரக்டர் வசந்த் நேரா என்கிட்ட வந்து சூர்யாவை நடிக்க வைக்க ஆசப்படுவதாக சொன்னாறு. அப்போ தான் அவன் ஒரு நாளைக்கே 2 வார்த்தை தான் பேசுவான். ஒரு நடிகனுக்கான செட்டப்பே அவன்கிட்ட இல்லன்னு சொன்னேன். அப்புறம் நான் சூர்யா கிட்ட பேசுனா உங்களுக்கு எதாவது பிரச்சனையான்னு கேட்டாரு. நான் இல்லன்னு சொன்னதும் நேரா அங்க போயிட்டாரு.
கிடுக்குப்பிடி கேள்வி
சினிமாவுக்கு வந்தா நிறைய கெட்டப் பழக்கம் எல்லாம் வரும். நான் அங்க வரமாட்டேன்னு சூர்யா சொல்லிட்டாரு. அப்போ தான், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவரா இப்போ வரைக்கும் உங்க அப்பா இருக்காரு. வீட்டுலயே ஒரு ஆள எடுத்துக் காட்டா வச்சிட்டு இப்படி பேசலாமான்னு கிடுக்குப்பிடி கேள்வி கேட்டாங்க. இதுக்கு பதில் சொல்ல முடியாமத்தான் சூர்யா நடிக்க போனான்.
சூப்பரா சொதப்பிட்ட
இதுக்கு முன்ன வரைக்கும் சூர்யா ஷூட்டிங்க கூட பாத்ததில்ல. என்ன பண்ணுவான்னு நாங்க யோசிச்சோம். அப்போ தான் சூர்யாவோட அம்மா ஷூட்டிங் எல்லாம் போய் உதவி பண்ணாங்க. படம் உதயம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது. நான் எப்படி நடிச்சிருக்கேன்னு கேக்க ஆவலா சூர்யா நிக்குறாரு. நாங்க சூப்பரா சொதப்பிட்டன்னு சொன்னதும் முகம் ரொம்ப வாடிருச்சின்னு பேசி இருக்கார்.
கங்குவா படம் ரிலீஸ் சமயத்தில் இப்படி வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.