"சைதன்யாவோட கல்யாணத்துல தலையிட வேண்டாம்ன்னு சொல்லிட்டான்" மகனின் திருமணம் குறித்து பேசிய நாகார்ஜூனா
Nov 22, 2024, 10:02 AM IST
தன் திருமண வேலைகளைகளை தானே செய்து கொள்வதாக நாக சைதன்யா, அவரது தந்தை நாகார்ஜூனாவிடம் கூறியுள்ளாராம்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா திருமணம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமண ஏற்பாடுகள் எப்படி சென்று கொண்டிருக்கிறது என நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா பேசியுள்ளார்.
பாரம்பரிய முறைப்படி திருமணம்
இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசுகையில், சோபிதாவின் பெற்றோர் தங்களது மகளுக்கு ஒரு பாரம்பரிய தெலுங்கு திருமணத்தை நடத்த வேண்டும் என விரும்பினர். அதில் அவர்கள் உறுதியாகவும் இருந்தனர்.
இதனால், நாங்கள் எங்களது அன்னபூர்ணா ஸ்டூடியோவிலே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். இவர்களது திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ மிகவும் எளிமையாக நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் 300 முதல் 400 பேர் வரை மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
எளிமையான திருமணம்
முன்னதாக சைதன்யாவும் தனக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய விருப்பம் இல்லை எனக் கூறினார். அதனால் தான் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்துள்ளோம். மேலும், சைதன்யா அவரது திருமண ஏற்பாடுகளை அவரிடமே விட்டுவிடுமாறு கூறினார்.
இது எனக்கு பெரிய நிவாரணத்தை தந்தது. இதனால், நானும் சைதன்யாவிடமே அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து விட்டேன். இதனால், அவர்களுக்கான பொறுப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியது.
ஸ்டூடியோவில் திருமணம் செய்ய எளிமையாக இருக்கும்
அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் திரைப்பட படப்பிடிப்புகளின் போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து போலி திருமணங்களாவது நடக்கும். இதனால், இங்கு விளக்குகள் மற்றும் செட்டுகள் ஏற்கனவே இருப்பதால் இவர்களின் திருமணத்தை இங்கு நடத்துவது நன்றாக இருக்கும் எனக் கூறினார். ஆனால், திருமண வரவேற்பு இங்கு நடைபெறுமா எனக் கேள்வி எழுப்பியதற்கு அவர் எவ்வித பதிலும் கூறவில்லை.
சடங்குகள் திருமண பந்தத்தை வலுவாக்கும்
சோபிதாவின் பெற்றோர் அனைத்து சடங்குகளையும் தன் மகளுக்கு செய்ய ஆர்வமாக இருக்கின்றனர். மந்திரங்களும் விழாக்களும் எனக்கு மிகவும் பிடித்தமானது. அவை என் மனதிற்கு மிகவும் இனிமையானதாகவே இருக்கும். அவை எனக்கு அமைதியின் உணர்வைத் தருகின்றன. அதனால், சடங்குகள் நாக சைதன்யா- சோபிதா ஜோடியின் திருமணத்தை இதயப் பூர்வமான உறவை மேலும் வழுவாக்கும் என்றார்.
வைரலாகும் கல்யாண பத்திரிக்கை
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், சோபிதா- நாக சைதன்யா திருமண பத்திரிக்கை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தப் பத்திரிக்கையை பலரும் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தத் திருமண பத்திரிக்கையில் இந்தியாவின் தென்மாநிலங்களின் பாரம்பரியங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த பத்திரிக்கையில் ஒரு கோயில், விளக்குகள், மாடுகள், மணிகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மணமகன் மற்றும் மணமகளின் பெயர்களுடன் அவர்களின் குடும்ப விவரங்களும் இடம்பெற்றன. திருமண தேதி டிசம்பர் 4, 2024 ஆகும். இது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண நிச்சயதார்த்தம்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா, தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. . இதனை நாக சைதன்யாவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்தார்.
டாபிக்ஸ்