தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikant: ’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ மோடி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் நடிகர் ரஜினி காந்த் பேட்டி

Rajinikant: ’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ மோடி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லும் நடிகர் ரஜினி காந்த் பேட்டி

Kathiravan V HT Tamil

Jun 09, 2024, 10:16 AM IST

google News
Modi oath event: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் பேட்டி
Modi oath event: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் பேட்டி

Modi oath event: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் பேட்டி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்து உள்ளது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி என நடிகர் ரஜினி காந்த் தெரிவித்து உள்ளார். 

டெல்லி செல்லும் முன் நடிகர் ரஜினி காந்த் பேட்டி 

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று மாலை டெல்லியில் பதவியேற்கும் நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவி ஏற்பது அவரது சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். மக்கள் இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்து உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு இது ஆரோக்கியமான அறிகுறி, அடுத்த ஐந்து ஆண்டுகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.” என கூறினார்.  

இரவு 7.15 மணிக்கு பதவியேற்பு விழா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றதை அடுத்து, நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இந்த மெகா நிகழ்வு தேசிய தலைநகரான டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனின் ஃபோர்கோர்ட்டில் இரவு 7:15 மணிக்கு தொடங்க உள்ளது. 

பதவியேற்பு விழாவில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்கள் உட்பட 8,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

இத்தாலியில் நடைபெறவுள்ள ஜி 7 கூட்டத்திற்கு மோடி இந்த வார இறுதியில் புறப்படுவார் என்பதால் விருந்தினர் பட்டியல் கச்சிதமாக வைக்கப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விழாவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் யார்?

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் 'அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையின் ஒரு பகுதியாக மோடியின் பதவியேற்பு விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாலத்தீவு ஜனாதிபதி முகமது முயிஸு, சீஷெல்ஸ் நாட்டின் துணை ஜனாதிபதி அஹமட் அபிப், வங்கதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்கள் முதல் பத்ம விருது வென்றவர்கள் வரை 

சென்னை ரயில்வே பிரிவைச் சேர்ந்த வந்தே பாரத் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ்.மேனன் மற்றும் ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவ் ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தூய்மை பணியாளர்கள், திருநங்கைகள் மற்றும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு பங்களித்த தொழிலாளர்கள் புதிய அரசாங்கத்தின் விழாவில் கௌரவ விருந்தினர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு உத்தரகாண்டின் உத்தரகாசி இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கிய 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க உதவிய சுரங்கத் தொழிலாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். 

பல புகழ்பெற்ற மதத் தலைவர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், கலாச்சார கலைஞர்கள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுடன் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மோடியால் அங்கீகரிக்கப்பட்ட பங்கேற்பாளர்கள், இவர்களைத் தவிர, பதவிக்காலம் முடிந்ஹ்ட எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.

30 அமைசர்கள் வரை இடம் பெற வாய்ப்பு 

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 27 முதல் 30 அமைச்சர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 

நான்கு முதல் ஐந்து எம்.பி.க்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் மற்றும் இரண்டு எம்.பிக்களுக்கு ஒரு இணை அமைச்சர் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு பதவிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தன. காங்கிரஸ் 99 இடங்களிலும், இந்திய அணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றன.

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி