கங்குவா ஆடியோ லாஞ்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. விரைவில் வெளியீடு.. ரிலீஸுக்கு பந்தக்கால் போட்ட படக்குழு
Oct 20, 2024, 12:45 PM IST
கங்குவா ஆடியோ லாஞ்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்.. விரைவில் வெளியீடு.. ரிலீஸுக்கு பந்தக்கால் போட்ட படக்குழு குறித்து பார்ப்போம்.
கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படம் வரக்கூடிய நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 3500 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
அதன் முன்னோட்டமாக, கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா வரக்கூடிய அக்டோபர் 26ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கங்குவா படம் எத்தகையது?
ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் ஒன்று, கங்குவா. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகவுள்ளது. கங்குவா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய போர்க் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்டோர் போர் புரிவதுபோல் நடித்துள்ளனர்.
கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவா, எண்ணூர் துறைமுகம், பிஜி தீவுகள், கொடைக்கானல், ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு வெளிநாடு பகுதிகளில் நடைபெற்றது.
முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, “உண்மையில் கங்குவன் என்பது ஒரு மொழி. படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே இடம் பெற்றுள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். இது 3ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு வழக்கத்தில் இருந்தது. கங்கு என்றால் ’நெருப்பு’ என்று பொருள். கங்குவா என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள்படும்” என்று பேசியிருக்கிறார், சிறுத்தை சிவா.
கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?:
கங்குவா திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.
கங்குவாவால் அதை மாற்ற முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
மேலும் கங்குவா திரைப்படம் பன்மொழிகளில் வெளியிடப்படுவதற்காக நடிகர் சூர்யாவின் குரல் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்