Kachchathivu row: ’ராமரும், வாலியும் மல்யுத்தம் செய்த இடம் கச்சத்தீவு' காங்கிரஸை விளாசும் எல்.முருகன்!
Mar 31, 2024, 08:31 PM IST
”இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு இதனை வெறும் பேச்சளவில் கண்டித்து தன் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது”
ராமரும், வாலியும் மல்யுத்தம் செய்த இடம் கச்சத்தீவு என மத்திய இணை அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சிறப்பு மிக்க இராமநாதபுரம் சீமை மறவர் நாட்டு சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதி 1605 ஆம் ஆண்டு ஆவணம் முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலான அனைத்து பதிவேடுகளிலும் அப்பகுதி இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் இருந்துள்ளது. நாடு விடுதலை அடைந்து 1948இல் ராயத்வாரி முறை ஒழிக்கப்பட்ட பிறகு பதிப்பிக்கப்பட்ட நில ஆவணங்களின் படி மெட்ராஸ் மாகாணம் சர்வே எண். 1250 இல் கச்சத் தீவு இடம்பெற்றுள்ளது. இப்படி எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பாத்தியப்பட்ட கச்சத் தீவை தான் காங்கிரஸ் அரசு இலங்கைக்கு வாரிக் கொடுத்தது.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி ஓர் மாநிலத்தை மாற்றி அமைக்க கூட நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்தி சட்டம் இயற்ற வேண்டும்.
ஆனால் இதை எதையும் மதிக்காமல் தமிழ்நாட்டின் மாநில அரசிடம் கூட கலந்து பேசாமல் 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் படி கச்சத்தீவில் மீதான இந்தியாவின் உரிமையை தன்னிச்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது காங்கிரஸ் கட்சி. தமிழ்நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு இதனை வெறும் பேச்சளவில் கண்டித்து தன் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டது.
1974இல் நாடாளுமன்றத்தில் பாஜவின் முக்கிய தலைவர் வாஜ்பாய் அவர்கள் கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவிற்கு துரோகம் இழைத்துள்ளதை தகுந்த ஆதாரத்தை சுட்டி காட்டி பேசியுள்ளார். இராமாயண காவியத்தின் படி இராமரும் வாலியும் மல்யுத்தம் செய்த இடம் கச்சத் தீவு என்றும் அதன் ஒரு காலத்தில் "வாலித் தீவு" என அழைக்கப்பட்டதையும் வாஜ்பாய் அவர்களின் உரையில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
எக்காலமும் பாரதத்தின் உரிமை மற்றும் தமிழர்களின் நலன் மீது பாஜக அக்கறையுடன் இருக்கும் என்பதற்கு மேற்கண்ட உரை ஒரு உன்னத சாட்சி.
எனவே இத்தகைய பெருமைமிகு தீவை தமிழர்களின் பூர்வீக பூமியை தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கைக்கு தாரை வார்த்த காங்கிரஸ் அரசு இந்திய இறையாண்மைக்கும் சக்தியாகும் என கூறி உள்ளார்.
கச்சத்தீவு விவகாரம் - ஆர்.டி.ஐ அறிக்கை!
கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆவணங்களை பெற்றுள்ளார். அதில் பாக் ஜலசந்தியில் உள்ள பகுதியை அண்டை நாட்டிடம் ஒப்படைக்க 1974 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கம் எடுத்த முடிவு தொடர்பாக அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் "இரக்கமற்ற முறையில் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது" என்று புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன என்று கூறி இருந்தார். காங்கிரஸ் எப்படி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது என்ற புதிய உண்மைகள் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது. ஒரு போதும் காங்கிரஸை நம்ப முடியாது" என கூறி உள்ளார்.