Congress: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்! கையெழுத்தானது ஒப்பந்தம்! இதொ முழு விவரம்!
”தேனி தொகுதிக்கு பதிலாக திருநெல்வேலி தொகுதியும், திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது”
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தொகுதி விவரங்கள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் அஜோய் குமார் உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது உடன் இருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தொகுதிகள் மாற்றம்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேனி தொகுதிக்கு பதிலாக திருநெல்வேலி தொகுதியும், திருச்சி தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியும், ஆரணி தொகுதிக்கு பதிலாக கடலூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் தொகுதியில் ஏற்கெனவே கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.
திருநெல்வேலி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் 2004 மற்றும் 2009 தேர்தல்களில் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.எஸ்.ராமசுப்பு ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்:-
- திருவள்ளூர்
- கடலூர்
- மயிலாடுதுறை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- கிருஷ்ணகிரி
- கரூர்
- விருதுநகர்
- கன்னியாகுமரி
- புதுச்சேரி
வேட்பாளர்கள் யார்?
திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில், கடலூரில் கே.எஸ்.அழகிரி, மயிலாடுதுறையில் பிரவீன் சக்ரவர்த்தி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார், கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், நெல்லையில் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
விருப்பமனுவை கேட்கும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை விளவங்கோடு இடைத்தேர்தல் உட்பட 9 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் 500 ரூபாய் செலுத்தி இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை வரும் 20ஆம் தேதி மதியம் ஒரு மணிக்குள் பொதுத் தொகுதிக்கு 30 ஆயிரமும், தனித் தொகுதி மற்றும் மகளிருக்கு 15 ஆயிரமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை விண்ணப்பம் செலுத்தும் போது 10 ஆயிரமும், மகளிருக்கு 5 ஆயிரம் மும் நன்கொடை கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி
திமுக கூட்டணியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் புதியதாக இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மட்டும் தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படாத நிலையில் ராஜ்யசபா எம்பி சீட் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, பெரம்பலூர், ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.