Durai Vaiko Speech: ’செத்தாலும் தனி சின்னம்தான்!’ துரை வைகோ பேச்சால் நேரு அப்செட்!
Mar 24, 2024, 02:02 PM IST
”Durai Vaiko Speech: உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு எங்கள் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னோரு சின்னத்தில் நிற்க முடியாது”
திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலைய முன்மை செயலாளர் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில், நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வேட்பாளர் துரை வைகோ கூறுகையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் என்னை போட்டியிட வாய்ப்பு அளித்த அண்ணன் தளபதி அவர்களுக்கும், அண்ணன் கே.என்.நேரு அவர்களுக்கும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி மண்ணில் திமுகவுக்கு சிவனும், சக்தியாக உள்ள அண்ணன் நேருவை சுத்தி சுத்தி வந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அண்ணன் முகம் இறுக்கமாக உள்ளது. தனியாக பேசும்போதுகூட உங்கள் மகன் அருண் நேரு போல் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
நான் அரசியல்வாதி கிடையாது; அரசியலுக்கு வருவேன் என்று கனவில் கூட எதிர்பார்த்தது இல்லை. முதுமை, மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதுதான். 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் நான் அரசியலுக்கு வந்தேன். எனது கட்சிக்காரர்கள் வலுக்காட்டாயமாக இழுத்து வந்து அரசியலில் விட்டார்கள்.
நான் இப்போதும் பெரிய வேட்கை, ஆசையோடு அரசியலில் உள்ளேன் என்பது எனக்கு இல்லை. என் தந்தைக்கு ஒரு தலைக்குனிவு வந்துவிடக்கூடாது என நினைக்கிறோம். எங்கள் அப்பா ஒரு சகாப்தம், எங்க அப்பாவுக்கு தலைகுணிவு வந்துவிடக்கூடாது என அரசியலுக்கு வந்தேன்.
வைகோ மகன் அவருக்காக கேட்கிறான் என்பதற்காக சாத்தூர் தொகுதியை முதலமைச்சர் கொடுத்தார். அப்போது கூட டாக்டர் ரகுராம் என்ற சகோதரருக்கு கொடுத்தார்.
கட்சிக்காக எனக்கு விருப்பம் இல்லமல் நிற்கிறேன்; 30 வருஷம் உழைத்து தேய்ந்துவிட்டார். செத்தாலும் எங்களுக்கு தனி சின்னம்தான், நான் சுயமரியாதைக்காரன். அறிஞர் அண்ணாவின் கட்சி திமுக, டாக்டர் கலைஞர் கட்சி திமுக, எங்கள் அப்பாவும் திமுகவில்தான் இருந்தார், இதே உதயசூரியன் சின்னத்தில்தான் எங்கள் அப்பாவும் போட்டியிட்டார், உதயசூரியன் சின்னத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு எங்கள் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இன்னோரு சின்னத்தில் நிற்க முடியாது.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களை அழித்துவிட்டு மதவாத சக்திகள் காலூன்ற நினைக்கின்றன. இந்த நேரத்தில் தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள். நீங்கள் சீட்டே கொடுக்காவிட்டாலும், 40 தொகுதியிலும் வேலை பார்க்கிறோம். தயவு செய்து எங்களை புண்படுத்தாதீர்கள்.
இந்த தேர்தலை பொறுத்தவரை பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் போட்டி, திமுக அணி வெற்றி பெற உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளோம் என துரை வைகோ பேசினார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.