HT Election SPL: வெல்லப்போவது யார்?.. மீண்டும் தக்கவைக்குமா திமுக?.. தூத்துக்குடி மக்களவை தொகுதியின் களநிலவரம் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Election Spl: வெல்லப்போவது யார்?.. மீண்டும் தக்கவைக்குமா திமுக?.. தூத்துக்குடி மக்களவை தொகுதியின் களநிலவரம் இதோ..!

HT Election SPL: வெல்லப்போவது யார்?.. மீண்டும் தக்கவைக்குமா திமுக?.. தூத்துக்குடி மக்களவை தொகுதியின் களநிலவரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 24, 2024 08:01 AM IST

Thoothukkudi Lok Sabha constituency: தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகியவற்றை உள்ளடக்கிய தூத்தூக்குடி மக்களவைத் தொகுதி இதுவரை மூன்று தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது.

கனிமொழி, சிவசாமி வேலுமணி, ரொவினா ரூத் ஜேன்
கனிமொழி, சிவசாமி வேலுமணி, ரொவினா ரூத் ஜேன்

நான்கு முனை போட்டி

வரும் 19 ஆம் தேதியன்று வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தமிழகத்தை பொருத்தவரை பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ தலா 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு, கடந்த 2009-ல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகியவற்றை உள்ளடக்கிய இத்தொகுதி இதுவரை மூன்று தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது. 2009-ல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்று முதல்முறையாக நாடாளுமன்றம் சென்றார். அதன்பிறகு, 2014-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி வெற்றி பெற்றார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல்

2019-ல் நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளான கனிமொழி , அதிமுக-பாஜக கூட்டணியில் அப்போதைய தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் மூலம் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றது. முதல் முறையாக தேர்தல் களத்தை சந்தித்த கனிமொழி 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்.பி. கனிமொழி கருணாநிதி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி வேட்பாளராக களத்தில் உள்ளார். தமாகா சார்பாக தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் ரொவினா ரூத் ஜேன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெல்லப்போவது யார்?

திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழியே களம் காண்கிறார். எதிர்பார்க்கப்பட்டது போலவே கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியும் முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்து களப்பணிகளை துவங்கிவிட்டது. தமாகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.டி.ஆர். விஜய சீலன் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர். அதிமுகவை பொறுத்தவரை புது முக வேட்பாளராக சிவசாமி வேலுமணி கருதப்படுகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ள நிலையில், கனிமொழி மீண்டும் வெற்றி பெறுவாரா? அல்லது புதியவருக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.