Modi vs MK Stalin: ’இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு!’ நரேந்திர மோடியை விளாசும் மு.க.ஸ்டாலின்!
Apr 22, 2024, 07:46 PM IST
”அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது”
பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப்பேச்சு இழிவானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ராஜஸ்தானில் நேற்றைய தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்கள் மற்றும் "ஊடுருவல்காரர்கள்" போன்ற சிறுபான்மையினருக்கு செல்வத்தை மறு விநியோகம் செய்வார்கள் என்று கூறினார்.
"தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை கணக்கிட்டு, பின்னர் அந்த சொத்தை விநியோகிப்போம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது" என்ற பிரதமர் நரேந்திர மோடி, "அவர்கள் அதை யாருக்கு விநியோகிப்பார்கள்?" என்று அவர் கேட்டார்.
"நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு வழங்க வேண்டுமா? அதற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்களா?" என்று மோடி கேள்வி எழுப்பினார். "உங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்குச் சொந்தமான தங்கத்தை எண்ணி பின்னர் அவர்கள் அதை விநியோகிப்பார்கள் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது."
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், "நாட்டின் சொத்துக்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு" கூறியதாக குறிப்பிட்டார்.
பிரதமரின் பேச்சுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளிடையே கடும் கண்டனம் எழுந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் இட்டுள்ள சமூகவலைத்தள பதிவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நச்சுப் பேச்சு இழிவானதும் மிகவும் வருத்தத்திற்குரியதும் ஆகும். தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்.
அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சைக் காதில் வாங்காதது போல் இருக்கும் தேர்தல் ஆணையம் நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி அப்பண்பையே கைவிட்டுள்ளது.
இந்தியா கூட்டணி வாக்குறுதியளித்துள்ள சமூக-பொருளாதார மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்ததாகும். அதற்குத் தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாஜகவின் வஞ்சகமான திசைதிருப்பும் தந்திரங்களைப் பற்றி கவனமாக இருக்கவேண்டும். மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நமது முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகங்களுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிங்வி, "ஒரே மதம் மற்றும் காங்கிரஸ் கட்சி அவர்களுக்கு நாட்டின் அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் மற்றும் கட்சி ஊடுருவல்காரர்களுடன் தொடர்புடையது என்ற குற்றச்சாட்டு தெளிவாக உள்ளது" என்று கூறினார். அரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி கோரியது.
காங்கிரஸின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக பதிலளிக்கவில்லை. முன்னதாக, இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று ஆணையம் கூறியது.