தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Pm Modi Vs Cm Stalin: 'பிரதமர் மோடி ஒரு வசூல்ராஜா'.. வெளுத்து வாங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

PM Modi vs CM Stalin: 'பிரதமர் மோடி ஒரு வசூல்ராஜா'.. வெளுத்து வாங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Karthikeyan S HT Tamil
Apr 15, 2024 09:12 PM IST

Lok Sabha Elections: PM Cares மற்றும் தேர்தல் பத்திர முறைகேடுகளை சுட்டிக்காட்டி திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

"இதுவரை நீங்கள் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்திருக்கலாம். பல இளைஞர்களுக்கு இது முதல் தேர்தலாக இருக்கலாம். ஆனால், இது சற்றே மாறுபட்ட தேர்தல். மிக மிக முக்கியமான தேர்தல். ஏன் என்றால், இந்த தேர்தலில் நீங்கள் போடும் வாக்குதான் இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா அல்லது சர்வாதிகாரம் இருக்கவேண்டுமா? அதுபோன்று, இந்தியாவில் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய சட்டம் இருக்க வேண்டுமா அல்லது R.S.S. எழுதும் சட்டம் இருக்க வேண்டுமா? இடஒதுக்கீடுமுறை இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா? எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டுமா - வாழக்கூடாதா? இதையெல்லாம் முடிவு செய்யப்போகும் தேர்தல். உங்கள் வாக்குதான் அந்த முடிவை தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நாம் ஏன் “வேண்டாம் மோடி”என்று சொல்கிறோம் என்றால், அவர் இரவுகளில் கொண்டுவரும் சட்டங்களால்! தீடீர் என்று ஒரு இரவில்தான், ஊழலை ஒழிக்க வந்த அவதாரப் புருஷராக டி.வி. முன்பு தோன்றி, பணமதிப்பு இழப்பை அறிவித்தார். இரவில் பல மக்களை ஏ.டி.எம் வாசலில் நிற்க வைத்தார். அதேபோன்று ஒரு இரவில்தான், பெரிய பொருளாதாரப் புலி போன்று, G.S.T. சட்டத்தை அமல்படுத்தி, தொழில் முனைவோரையும் நடுத்தர வர்க்க மக்களையும் கொடுமைப் படுத்தினார். எவ்வளவு பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கொரோனா வந்தப்போது என்ன செய்தார்? “இரவெல்லாம் எல்லாரும் மணி அடியுங்கள், விளக்கு ஏற்றுங்கள், கொரோனா ஒழிந்துவிடும்”என்று பெரிய ‘சயிண்டிஸ்ட்’ போன்று பேசினார். இன்னும் நிறைய இருக்கிறது! அதனால்தான், நாங்கள் தொடர்ந்து சொல்கிறோம். பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் வீட்டுக்கும் கேடு.. நாட்டுக்கும் கேடு.

பிரதமர் மோடி இரவுகளில் அறிவித்த அறிவிப்புகளை எல்லாம் மாற்றி, இந்தியாவில் விடியலை ஏற்படுத்தத்தான், இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம். அதனால்தான், எனது அன்புச் சகோதரர் ராகுல்காந்தி கோவை வந்தபோது, “ராகுல் அவர்களே... வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக”என்று கூறினேன். மக்களைச் சந்தித்து, மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் பிரச்சினைகளை முழுமையாகத் தெரிந்துகொண்டு தி.மு.க.வும் - காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம்.

நாட்டிற்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்துக்கான டிரெய்லர்தான், பொது சிவில் சட்டம்! மக்களைப் பிளவுபடுத்துவது மட்டுமல்ல – ஏமாற்றும் தேர்தல் அறிக்கையாகவும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இருக்கிறது. ”ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்கப் போகிறோம்”என்று 2019 தேர்தல் அறிக்கையில் கூறியதை, மறுபடியும் காப்பி – பேஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில், நாப்கினுக்கு ஜி.எஸ்.டி போட்டதுதான் பா.ஜ.க. ஆட்சி! அந்த வரியை நீக்க நாடாளுமன்றத்தில் நம்முடைய எம்.பி.க்கள்தான் குரல் கொடுத்தார்கள்.

அதுமட்டுமல்ல, இன்றைக்கும் விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்களே. அவர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அறிவித்திருக்கிறார்களா? இல்லையே! விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் என்று கூறினார்கள். அதை முதலில் செய்தார்களா? இல்லை. பா.ஜ.க.விடம் பத்தாண்டுகள் சாதனை என்ற சொல்லவும் எதுவும் இல்லை. அடுத்து செய்யப்போகிறோம் என்று சொல்ல சரியான வாக்குறுதியும் இல்லை.

இந்த இந்தியத் துணைக் கண்டத்தில், மரியாதைக்குரிய நேரு தொடங்கி மோடி வரைக்கும், 14 பேர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது இருக்கும் பிரதமர் மோடி போன்று, E.D. – I.T. – C.B.I. வைத்து மிரட்டிக் கட்சியை உடைக்கிறது, எம்.எல்.ஏ, எம்.பி.க்களை வாங்குவது, முதலமைச்சர்களைக் கைது செய்வது, தொழிலதிபர்களை மிரட்டித் தேர்தல் பத்திரம் வாங்குவது., பி.எம். கேர்ஸ் என்று தனியார் அறக்கட்டளை வைத்து நிதிவாங்குவது என்று, வசூல் செய்த ஒரே ’வசூல்ராஜா’ மோடி ஒருவர்தான்.

வாயைத் திறந்தாலே சாதி – மதம் என்று மக்களைப் பிளவுபடுத்தித்தான் பேசுகிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல், முஸ்லீம் லீக்கின் அறிக்கை என்று விமர்சித்து, பிரிவினைவாதம் பேசினார். இப்போது, இன்னும் கீழே இறங்கிச் சென்று, மற்றவர்கள் உண்ணும் உணவை விமர்சிக்கிறார். பதவியில் தொடர முடியாது என்ற வெறியில், பிரிவினைப் பேச்சில் ஈடுபட்டிருக்கிறார். உணவு என்பது தனிநபர்களின் விருப்பம், அடுத்த மனிதர் என்ன சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்ய மோடிக்கு மட்டுமல்ல, யாருக்குமே உரிமையில்லை."இவ்வாறு அவர் பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்