தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Pm Modi On Dmk: ’திமுக தேசத்துக்கே எதிரி!’ குமரியில் பொறிந்து தள்ளிய நரேந்திர மோடி!

PM Modi On DMK: ’திமுக தேசத்துக்கே எதிரி!’ குமரியில் பொறிந்து தள்ளிய நரேந்திர மோடி!

Kathiravan V HT Tamil
Mar 15, 2024 02:04 PM IST

”PM Modi: இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு திமுக-காங்கிரஸ் இந்திய கூட்டணியின் ஆணவத்தை தகர்த்தெறியும் என்ற அவர், பாஜகவிடம் மக்களுக்குக் காட்டுவதற்கான வளர்ச்சி முயற்சிகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஊழல்களின் பட்டியல் பெரியது என்றார்”

கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் தொடர் சுற்றுப்பயணங்களை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை 5 முறை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். மேலும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார். 

இந்த நிலையில், இன்றைய தினம் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது,  நாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீது திமுகவுக்கு வெறுப்பு இருக்கிறது. "தமிழகத்தின் எதிர்காலம் மற்றும் கலாச்சாரத்தின் எதிரி திமுக. அயோத்தி ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டை' விழாவுக்கு முன், நான் தமிழகம் வந்து, மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றேன் என பிரதமர் மோடி கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒளிபரப்புவதை திமுக அரசு நிறுத்த முயற்சித்தது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது திமுகவுக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வழிவகுத்தது நமது அரசுதான் என பிரதமர் மோடி கூறினார். 

இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு திமுக-காங்கிரஸ் கூட்டணியின் ஆணவத்தை தகர்த்தெறியும் என்ற அவர், பாஜகவிடம் மக்களுக்குக் காட்டுவதற்கான வளர்ச்சி முயற்சிகள் இருந்தாலும், எதிர்க்கட்சிகளின் ஊழல்களின் பட்டியல் பெரியது என்றார். 

திமுகவும், காங்கிரஸும் பெண்களுக்கு எதிரானவை என்றும், பெண்களை முட்டாளாக்கி அவமானப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டிய மோடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு பல முயற்சிகளை துரிதமாக செயல்படுத்தி வருவதாக கூறினார். 

தமிழகத்தின் இணைப்பை மேம்படுத்த, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளின் வலையமைப்பை நாங்கள் தயார் செய்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்னும் உள்ளன என பிரதமர் பேசினார். 

நாட்டை உடைக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரித்தனர். இப்போது தமிழக மக்களும் அதையே செய்யப் போகிறார்கள். திமுகவும், காங்கிரசும் மக்களை கொள்ளையடிக்க நினைக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

மக்களைக் கொள்ளையடிப்பதற்காக திமுகவும் காங்கிரஸும் ஆட்சிக்கு வர விரும்புகின்றன; 2ஜி ஊழலின் மிகப் பெரிய ஆதாயம் திமுகதான் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

பிரதமர் மோடியின் தெற்கு வியூகம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தென்மாநிலங்களில் பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணங்களை செய்து வருகிறார். 

வரும் மார்ச் 17 ஆம் தேதி ஆந்திராவில் தெலுங்கு  தேசம் கட்சி-பாஜக-ஜனசேனா ஆகிய கட்சிகள் இணைந்து நடத்தும் கூட்டு சாலை பேரணியில் பிரதமர் மோடி பேசுகிறார்.  

நாளைய தினம் தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மற்றும் கர்நாடகாவின் குல்பர்கா ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். குல்பர்கா தொகுதி காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோட்டையாக இருந்து வருகிறது.  இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில் தனது பாஜக போட்டியாளரிடம் தோல்வியை சந்தித்து இருந்தார்.

மார்ச் 18 ஆம் தேதி தெலுங்கானாவின் ஜக்தியால் மற்றும் கர்நாடகாவின் சிவமோகா ஆகிய இடங்களில் பேரணிகளில் அவர் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோயம்புத்தூரில் ரோட்ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். 

மார்ச் 19ஆம் தேதி அன்று கேரளாவின் பாலக்காட்டிலும், சேலத்திலும் ரோட்ஷோவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 130 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் கொண்டுள்ளன.

WhatsApp channel

டாபிக்ஸ்