Andhra Pradesh polls: ஆந்திர அரசியலில் திருப்பம்! முதல்வர் ஜெகனை டீலில் விட்ட விஜயம்மா! மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு!
May 11, 2024, 08:19 PM IST
”மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்”
மறைந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மனைவியும், தற்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருமான ஒய்.எஸ்.விஜயம்மா தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும், கடப்பா தொகுதியின் முன்னாள் எம்.பியுமான விவேகானந்த ரெட்டி கட்நத 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.விஜயம்மா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது மகனும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் தனது மகள் ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு ஒய்.எஸ்.ஆர் ஆதரவாளர்களை கேட்டுக்கொண்டார்.
"நான் உங்கள் விஜயம்மா பேசுகிறேன், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியை (ஒய்.எஸ்.ஆர்) நேசிக்கும் அனைத்து மக்களும், அவரது ஆதரவாளர்களும், கடப்பா மக்களவைத் தொகுதி வாக்காளர்களும், ஷர்மிளாவை ஆசீர்வதித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயம்மா பேசும் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளது.
ஷர்மிளா தனது மறைந்த தந்தையைப் போல ஆதரவைத் தேடி வாக்காளர்கள் முன் வந்துள்ளார் என்று கூறிய விஜயம்மா, ஒய்.எஸ்.ஆர் போல தனது மகளுக்கு சேவை செய்ய வாய்ப்பளிக்குமாறு ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆந்திர அரசியல் நிலவரம்
ஆந்திராவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஐ (எம்) ஆகியவை அங்கம் வகித்து உள்ளன.
4.41 கோடி வாக்காளர்களை கொண்ட ஆந்திராவில் லோக் சபாவுக்கு 503 வேட்பாளர்களும், சட்டசபை தேர்தலில் 2,705 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் .
ஒய்எஸ்ஆர்சிபி தலைவரும் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, புலிவேந்தலா சட்டமன்றத் தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், ஜனசேனா தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் பிதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், ஜெகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா மக்களவை தொகுதியிலும், பாஜக மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி ராஜமகேந்திராவரம் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளிலும், 25 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதே நேரத்தில் பாஜக ஆறு மக்களவை மற்றும் 10 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகின்றனது. ஜனசேனா இரண்டு லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 151 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களையும், ஜன சேனா கட்சி ஒரு இடத்தையும் வென்று இருந்தது.