Sam Pitroda: ‘தென் இந்தியர்கள் நிறம் குறித்த சர்ச்சை!’ காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!
”தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்”

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து உள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்த அவரது இனவெறிக் கருத்து, நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இடையே பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இப்போது அமெரிக்காவில் இருக்கும் சாம் பிட்ரோடா, ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, சாம் பிட்ரோடாவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டில், பொது தகவல் உள்கட்டமைப்பு தொடர்பான மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் பிட்ரோடா இருந்தார்.