WPL 2024: அதிரடியில் மிரட்டிய யுபி வாரியர்ஸ் சூப்பர் வெற்றி! குஜராத் ஹாட்ரிக் தோல்வி
Mar 01, 2024, 11:00 PM IST
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் 8வது போட்டி குஜராஜ் ஜெயிண்ட்ஸ் மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது.
விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து இதுவரை இந்த சீசனில் வெற்றி பெறாத அணியாக குஜராத் ஜெயிண்ட்ஸ் உள்ளது. எனவே முதல் வெற்றியை பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் இந்த போட்டியில் களமிறங்கியது.
குஜராத் சொதப்பல் பேட்டிங்
முதலில் பேட் செய்த குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. குஜராத் பேட்டர்கள் ரன்குவிப்பில் ஈடுபட்ட போதிலும் பெரிய ஸ்கோராக மாற்ற தவறி தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 35, ஆஷ்லே கார்ட்னர் 30 ரன்கள் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஓபனிங் பேட்டர் லாரா வோல்வார்ட் 28 ரன்கள் எடுத்தார்.
சிறந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் குஜராத் பேட்டர்கள் தடுமாறிய நிலையில் அணியால் பெரிய ஸ்கோரும் எடுக்க முடியவில்லை. யுபி வாரியர்ஸ் பவுலர்களில் சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
யுபி பேட்டர்கள் அதிரடி ஆட்டம்
கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்தை கையாண்டனர் யுபி வாரியர்ஸ் பேட்டர்கள். இதையடுத்து குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக இந்த போட்டியிலும் அதே பாணியை கடைப்பிடித்தனர்.
ஓபனிங் பேட்டரும், கேப்டனுமான அலிசா ஹீலி அதிரடி தொடக்கத்தை தந்து விரைவாக 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக பேட் செய்த கிரண் நவ்கிரே 12, சாமரி அதபத்து 17 ரன்கள் அடித்து அடுத்தடுத்து அவுட்டானார்கள்.
நான்காவது பேட்டராக பேட் செய்ய வந்த கிரேஸ் ஹாரிஸ், அதிரடியை தொடர்ந்தார். பவுண்டரிகளாக விரட்டிய ஹாரிஸ், 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அரைசதமடித்த அவர் 33 பந்துகளில் 60 ரன்கள் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நான்கு போட்டிகள் விளையாடி 2 வெற்றிகளை பெற்றிருக்கும் யுபி வாரியர்ஸ் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
மூன்று போட்டிகள் விளையாடியிருக்கும் மூன்றிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகள் மோதுகின்றன. மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9