Virat Kohli: தனிப்பட்ட காரணம் - நாடு திரும்பும் கோலி! தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்டில் பங்கேற்பாரா?
Dec 22, 2023, 04:32 PM IST
டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பரிக்கா சென்ற விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களால் நாடு திரும்புகிறார். இருப்பினும் பாக்சிங் டே டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர், தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கவில்லை. போதிய ஓய்வு தேவை என்ற அவரது கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ மேற்கூறிய தொடர்களில் கோலியை சேர்க்கவில்லை.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கோலி விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவர் டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக டி20, ஒரு நாள் என வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் முடிவுற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.
பாக்ஸிங் டே ஆட்டமாக முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பரிக்காவுக்கு வருகை புரிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தனிப்பட்ட அவசர நிலை காரணமாக விராட் கோலி நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலி நாடு திரும்பினால் வரும் செவ்வாய்க்கிழமை டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் அணியில் இணைவார் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த டெஸ்ட் தொடர் 2023-25 காலகட்டத்துக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அங்கம் வகிக்கிறது. எனவே இது இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 30 இன்னிங்ஸில் 932 ரன்கள் அடித்து முக்கிய பங்களிப்பை தந்தார். இதையடுத்து இந்த சுழற்சிக்கான தொடரில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதமடித்து தனது ரன் வேட்டையை தொடர்ந்துள்ளார் கோலி.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் போல் இந்த முறையில் கோலி பேட்டிங்கில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 சுழற்சிக்கான புள்ளிப்பட்டியலில் இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 66.67 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது.
தென் ஆப்பரிக்கா மண்ணில் விராட் கோலி சிறந்த பேட்டிங் சராசரியை வைத்துள்ளார். அங்கு 2 டெஸ்ட் சதங்களை அடித்திருக்கும் கோலி, இதுவரை தென் ஆப்பரிக்காவில் விளையாடி 7 டெஸ்ட் போட்டிகளில் 719 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதம், 3 அரைசதம் அடங்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்