HBD Cheteshwar Pujara: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 நாள்களிலும் பேட் செய்த பேட்ஸ்மேன்! இந்திய டெஸ்ட் அணி காப்பாளன் புஜாரா
Jan 25, 2024, 06:30 AM IST
ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பிறகு இந்தியாவின் அடுத்த பெருஞ்சுவர் என அழைக்கப்பட்ட புஜாரா, அந்த பெயருக்கு ஏற்றார் போல் தனது நிதானம், கட்டுக்கோப்பான இன்னிங்ஸால் இந்திய அணியை பல்வேறு போட்டிகளில் காப்பாற்றியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போது இந்தியா அணியின் பயிற்சியாளராக இருப்பவருமான ராகுல் டிராவிட் அழைக்கப்பட்டார். இவர் ஓய்வை நெருங்கிய காலகட்டத்தில் அணியில் அறிமுகமான சத்தேஷ்வர் புஜாரா, டிராவிட்டின் இடத்துக்கு பொருத்தமான வீரராக திகழ்ந்தார். டிராவிட்டை போல் நிதானம், பொறுமை, கட்டுக்கோப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தி பிற அணி பவுலர்களுக்கு சவால் மிகுந்த பேட்ஸ்மேனாகவே திகழ்ந்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் செளராஸ்ட்ரா அணிக்காக விளையாடி வந்த புஜாரா, 2010இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அப்போது அணியில் சீனியர் வீரர்களான சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷமன் ஆகியோர் இருந்தத நிலையில் மாற்று வீரராக அணியில் இடம்பிடித்தார். அப்படித்தான் முதல் டெஸ்ட் தொடரில் யுவராஜ் சிங்குக்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.
ராகுல் டிராவிட் ஓய்வுக்கு பிறகு அணியில் நிரந்தர இடம் பிடித்த புஜாரா, அவரது நம்பர் 3 பேட்டிங் இடத்திலும் தன்னை பொருத்தி கொண்டார். 13 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வரும் புஜாரா யு19 இந்திய டெஸ்ட் அணியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார். முதல் இன்னிங்ஸிலேயே இரட்டை சதமடித்து தனது பேட்டிங் திறமையை நிருபித்தார்.
தொடர்ந்து யு19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவர், டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். அத்துடன் தொடர் நாயகன் விருதையும் வென்றார். அதன் பின்னர் நடந்த ஆஃப்ரோ ஆசிய கோப்பை தொடரிலும் ஜொலித்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாகி விளையாடி வந்த போதிலும், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட புஜாரா, முதல் தர கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமை பெற்றார்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரில் ரன்வேட்டை நிகழ்த்தி, அணியில் நிலையான இடத்தை பிடித்த புஜாராவுக்கு, 2014இல் இங்கிலாந்துக்கு எதிரான அந்நிய மண் டெஸ்ட் தொடர் ஏமாற்றமாக அமைந்தது. இந்த தொடருக்கு பின் அங்கு கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி தனது பார்மை மீட்டெடுத்த அவர் அடுத்தடுத்த டெஸ்ட் தொடரில் அணிக்கு முக்கிய பங்களிப்பை தந்தார்.
டெஸ்ட் கிரக்கெட்டில் அதிக வேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர், ஒரு இன்னிங்ஸில் அதிக பந்துகள் எதிர்கொண்ட பேட்ஸ்மேன் (525 பந்துகள்), டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாளிலும் பேட் செய்த மூன்றாவது இந்திய பேட்ஸ்மேன் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
டிராட்டுக்கு மாற்று வீரராக அணியில் தேர்வு செய்யப்பட்ட அவரைபோன்றே நிதான பேட்டிங்கால் அணியை மீட்டெடுக்கும் காப்பாளனாக இருந்து வந்த புஜாரா சமீப காலமாக பார்மை இழந்து தவித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கழட்டிவிடப்பட்டார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் புஜாரா சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே இதேபோல் பார்ம் இல்லாதபோது அதிலிருந்து மீண்டு புஜாரா, மீண்டும் அணிக்கு திரும்பி தனது பங்களிப்பை தருவார் என்றே அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 11வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றிருக்கும் புஜாராவுக்கு இன்று 36வது பிறந்தநாள்.
டாபிக்ஸ்